ஜி எஸ் டி வரி குறைப்பு : ஏசி மற்றும் டிவி விலை குறையுமா?

டில்லி

டுத்த வாரம் நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஏசி மற்றும் டிவிகளுக்கு ஜிஎஸ்டி வரியை 18% ஆக குறைக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

கடந்த 2017 ஆம் வருடம் ஜுலை மாதம் 1 ஆம் தேதியில் இருந்து ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்துள்ளது.  அதன் பிறகு கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் பல பொருட்களின் வரி விகிதங்கள் மாற்றப்பட்டுள்ளன.   அது மட்டுமின்றி ஜிஎஸ்டி வரியில் இருந்தும் சில பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.  இந்த வருடக் கணக்கின்படி சராசரியாக மாதம் ஒன்றுக்கு அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி ஜிஎஸ்டி மூலம் வருமானம் கிடைக்கிறது

தற்போது அதிக பட்ச ஜிஎஸ்டியாக 28% உள்ளது.   இந்த வரி விதிப்பில் டிவி, ஏசி, டிஜிடல் காமிராக்கள் உள்ளிட்ட பொருட்கள் உள்ளன.   வரும் 17 ஆம் தேதி அன்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்  நடைபெற உள்ளது.   இந்த கூட்டம் குறித்து செய்தியாளர்களிடம் ஒரு மூத்த அரசு அதிகாரி பேசிஉள்ளார்.

அப்போது அவர், “வரி விதிப்பு விகிதங்களை குறைப்பது குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன.   தற்போதுள்ள ஜிஎஸ்டியின் அதிக வரி விதிப்பான 28%லிருந்து பல பொருட்களை 18% விகிதத்துக்கு மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.   அதே நேரத்தில் தற்போது அதிகபட்ச வரியாக 18% மாற்றப்படப் போவதில்லை.

ஒரு சில ஆடம்பரப் பொருட்களை இன்னும் 28% ஜிஎஸ்டி வரி விதிப்பில் வைத்திருக்க அரசு எண்ணுகிறது.   குறிப்பாக டிவி, ஏசி, டிஜிடல் காமிரா உள்ளிட்ட சில பொருட்களின் ஜி எஸ் டி 28%லிருந்து 18% ஆக குறைக்கப்பட உள்ளது.   அத்துடன் 18% வரிவிதிப்பில் உள்ள சில பொருட்கள் 5% வரி விதிப்புக்கு மாற்றப்பட உள்ளன.  இதன் மூலம் அரசுக்கு ரூ1000 கோடி இழப்பு ஏற்படும்” என தெரிவித்தார்.