கொல்கத்தா,

நாடு முழுவதும் இன்று முதல் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்புக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மோடி அரசு பிடிவாதமாக அமல்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஜி.எஸ்.டி-யை அமல்படுத்தி நாட்டின் ஜனநாயகம், சுதந்திரத்தை சவக்குழிக்குள் மத்திய அரசு தள்ளி உள்ளது  என்று குற்றம் சாட்டினார்.

மேலும்,  ஜி.எஸ்.டி.,யின் மூலம், மத்திய அரசு  நாடு முழுவதிலுமுள்ள சிறு வர்த்தகர்களை துன்புறுத்துகிறது  என்றும், 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 14 நள்ளிரவில் நமக்கு சுதந்திரம் கிடைத்தது, அதே நேரத்தில் நமது மக்களின் சுதந்திரமும் ஜனநாயகமும் 2017, ஜூன் 30ம் தேதி நள்ளிரவில் சவக்குழிக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

மத்தியில் கேலிக்கூத்தான ஆட்சி நடக்கிறது என்று விமர்சித்துள்ள மம்தா, ஜி.எஸ்.டி. சட்டத்தில் வர்த்தகர்களுக்கு எதிராக மோசமான கட்டுப்பாடுகள் உள்ளதால் வியாபாரிகள் கடும் அச்சத்தில் உள்ளதாகவும் கூறினார்.