செல்போன்கள் மீதான ஜிஎஸ்டி 12ல் இருந்து 18 சதவீதமாக அதிகரிப்பு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

டெல்லி: செல்போன்கள் மீதான ஜிஎஸ்டி 12ல் இருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில், நிர்மலா சீதாராமன் தலைமையில், 39வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது. தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

செல்போன், ஜவுளி, காலணி, உரம், சூரிய சக்தி உபகரணங்கள் உள்ளிட்ட சில பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை உயர்த்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

லாட்டரி சீட்டு பரிவர்த்தனைகளுக்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி வசூலிப்பது குறித்தும், ஜிஎஸ்டி வரி பிடித்தத்தை திரும்ப பெறும் புதிய முறையை எளிமைப்படுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில்  டெல்லியில் ஜிஎஸ்டிகவுன்சில் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: செல்போன்களுக்கான ஜிஎஸ்டியை 12 சதவீதத்தில் இருந்து 18% ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

செல்போனில் குறிப்பிட்ட பாகங்களுக்கான ஜிஎஸ்டியும் 12%இல் இருந்து 18% ஆக உயர்த்தப்படும். கைகள் மற்றும் இயந்திரங்களால் தயாரிக்கப்படும் தீக்குச்சிகளுக்கு ஜிஎஸ்டி 12% ஆக நிர்ணயம் செய்யப்படும் என்றார்.