டில்லி,
ஜி.எஸ்.டி என்று அழைக்கப்படும்  பொருள் மற்றும் சேவை வரிகளில் மாற்றம் செய்து  நான்கு அடுக்கு வரி முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய முறையில் 5%, 12%. 18% மற்றும் 28% என்ற அளவில் வரிவிதிப்பு இருக்கும்.
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை முடிவு செய்யப்பட்டாலும், எந்தெந்த பொருட்கள் எந்த வரி விகிதத்துக்குள் வரும் என்று இறுதி செய்யப்படவில்லை. வரி விகிதங்கள் அந்தந்த துறை வாரியாக முடிவு செய்யப்பட்டு பட்டியலிடப்பட்டால்தான் ஜிஎஸ்டி வரியின் சாதக, பாதகங்கள் முழுமையாக தெரியவரும்.
gst
சொகுசு கார்கள் தற்போது 52 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இதற்கு முன்பு ஜிஎஸ்டி உச்ச பட்ச வரி 26 சதவீதம்தான். ஆனால், தற்போது உச்ச பட்ச வரி 28 சதவீதத்துடன் சேர்த்து வித்தியாச வரி விகிதமும் வசூலிக்கப்பட இருக்கிறது.
மத்திய அரசு கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்தபோது, 12.36 சதவீதமாக இருந்த சேவை வரி யை 14 சதவீதமாக உயர்த்தியது. பின்னர் தூய்மை இந்தியா திட்டத்துக்காக அரை சதவீத வரியும், கிரிஷ் கல்யாண் என்படும் வேளாண் மேம்பாட்டு திட்டங்களுக்காக அரை சதவீத வரியும் விதித்து, சேவை வரியை 15 சதவீதமாக உயர்த்திவிட்டது.
தற்போது ஜிஎஸ்டியில் இந்த வரி விதிப்பு 18 சதவீதமாகி விட்டது.
இதனால் போன் பில், ஓட்டல் கட்டணம் முதல் கிரெடிட் கார்டு வரை சேவைவரி பட்டியலில் உள்ள அனைத்துக்கும் கட்டணங்கள் அதிகரிக்கும்.
சமையல் பொருட்களான  ரீபைண்ட் ஆயில், கடுகு எண்ணெய், கடலை எண்ணெய் தனியா, கருப்பு மிளகு ஆகியவற்றுக்கு தற்போது 5 சதவீதமாக உள்ளது இதனால் இவற்றுக்கு பாதிப்பு இருக்காது. அதேநேரத்தில், மஞ்சள், ஜீரகம் ஆகியவற்றுக்கு தற்போது 3 சதவீத வரி உள்ளது. இதனால் இவற்றின் விலை உயரலாம்.
வீட்டின் அத்தியாவசிய பொருளான  டிவி, பிரிட்ஜ், ஏர்கண்டிஷனர், வாசிங்மிஷின், இன்வெர்டர், மின்விசிறி, சமைலறைக்கான மின்சார சாதனங்கள் போன்ற பலவும் தற்போது 29 சதவீதம் முதல் சுமார் 31 சதவீதம் வரை விதிக்கப்படுகிறது. இதன் வரி சற்று குறைய வாய்ப்பு உள்ளது.
அதேபோல் அன்றாடம் உபயோகித்து வரும் சோப்பு, ஷாம்பு, ஷேவிங் கிரீம், முக பவுடர், ஹேர் ஆயில், ஷாம்பு, போன்றவை தற்போது 29 சதவீத வரிவிதிப்பில் வருகின்றன. இதனால் இவற்றின் விலை குறையும்.
 
காஸ் அடுப் பு, காஸ் பர்னர், கொசு விரட்டி மற்றும் பூச்சி ஒழிப்பு மருநஅதுகள் ஆகியவை தற்போது 25 சதவீத வரி விதிப்புக்குள் உள்ளன. . எனினும், இவை எந்த வரிவிதிப்புக்குள் வரும் என்று இன்னும் பட்டியலிடப்படவில்லை.
அதிகபட்ச வரியான 28 சதவீதம், ஆடம்பர பொருட்களுக்கு விதிக்கப்படும். இருப்பினும், தற்போது உள்ள வரி விதிப்புக்கு ஏற்ப வித்தியாசத்தொகை செஸ் வரியாக கூடுதலாக வசூலிக்கப்படும். இதனால், ஜிஎஸ்டி உச்ச பட்ச வரி குறைவாக இருந்தாலும் இவற்றின் விலை சரிவதற்கான வாய்ப்பு இல்லை.
 
 
புகையிலை பொருட்களுக்கு 65% பரியும், குளிர்பானங்கள், சொகுசு கார்கள் மற்றும் பான்மசாலாவுக்கு 40% வரியும் விதிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பொருட்களுக்கு மட்டுமே மேல் வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சிலால் இறுதி செய்யப்பட்ட வரி விகிதங்கள், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெற வேண்டும்.
அத்தியாவசிய பொருட்களுக்கு 0% வரி என்று அரசு அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தங்கம் மீதான விரிவிதிப்பு குறித்து அடுத்த கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
மேலும் பொருள் மற்றும் சேவை வரிகளுக்கு இழப்பீடாக முதலாண்டில் ரூ.50,000 கோடி செலுத்த வேண்டியது இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.