புதுடெல்லி: ஜிஎஸ்டி வரி வசூலிப்பு, தொடர்ந்த 3வது மாதமாக ரூ.1.1 லட்சம் கோடிகளைத் தாண்டியுள்ளதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்பட்ட இணக்கம் மற்றும் மீட்பு செயல்பாடுகளே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. முடிவடைந்த பிப்ரவரி மாதத்தில் வசூலான ஜிஎஸ்டி வசூல் தொகை ரூ.1,13,143 கோடிகளாக இருந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த வசூல் 7% அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மொத்த வருவாயில், சிஜிஎஸ்டி ரூ.21092 கோடிகள், எஸ்ஜிஎஸ்டி ரூ.27273 கோடிகள், ஐஜிஎஸ்டி ரூ.55253 கோடிகள் மற்றும் செஸ் ரூ.9525 கோடிகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது, இறக்குமதி பொருட்களின் மீதான வருவாய் 15% அதிகமாக கிடைத்ததாகவும், உள்நாட்டு பரிவர்த்தனை தொடர்பான வருவாய் 5% அதிகரித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.