புதுடெல்லி: இந்தாண்டின் அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாய், கடந்த 2018ம் ஆண்டின் ஜிஎஸ்டி வரி வருவாயுடன் ஒப்பிடுகையில், 5 ஆயிரம் கோடிக்குமேல் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி வரியாக வசூலான தொகை ரூ.1 லட்சத்து 710 கோடி. ஆனால், இந்தாண்டு அக்டோபர் மாத வசூல் 95 ஆயிரத்து 380 கோடி மட்டுமே என்று கூறப்பட்டுள்ளது.

பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி ஆகிய பொருளாதாரப் பேரழிவு நடவடிக்கைகளை நள்ளிரவில் அமல்படுத்தி, அடித்தள மக்களின் பொருளாதாரத்தில் பெரும் சேதத்தை உண்டாக்கிய மோடியின் அரசு, தான் எடுத்த காரியம் எதிலும் வென்றதில்லை.

ஜிஎஸ்டியின் மூலம் பெரியளவிலான வருமானம் கிடைக்கும் என்று அறிவித்தது அரசு. ஆனால், நாளுக்குநாள் வருமானம் குறைந்துகொண்டுதான் வருகிறதே ஒழிய, சாதாரண மக்களை வாட்டி வதைக்கும் ஜிஎஸ்டி யும் தோல்விதான்.

இவர்கள் ஒரு இலக்கு நிர்ணயித்தால், அது எப்போதும் எட்டப்படுவதே இல்லை. கடந்த செப்டம்பர் மாதத்தில், 91 ஆயிரத்து, 916 கோடி வசூலாகியுள்ளதாக அறிவித்துள்ளார்கள்.

அக்டோபர் மாத ஜிஎஸ்டி வருவாயான 95 ஆயிரத்து 380 கோடியில், மத்திய அரசின் வருவாய் ரூ.17 ஆயிரத்து 582 கோடியாகவும், மாநில அரசின் ஜிஎஸ்டி வருவாய் 23 ஆயிரத்து 674 கோடியாகவும், மத்திய – மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த வருவாய் ரூ.46 ஆயிரத்து 517 கோடியாவும் அறிவிக்கப்பட்டுள்ளது.