ஜிஎஸ்டி: பொழுதுபோக்கு வரியை ரத்து செய்து கேரளா அதிரடி!

திருவனந்தபுரம்,

டுத்த மாதம் முதல் நாடு முழுவதும் மத்திய அரசு  ஜிஎஸ்டி விரிவிதிப்பு அமல்படுத்த உள்ள நிலையில், கேரள அரசு சினிமா போன்றவற்றிற்கான பொழுதுபோக்கு வரியை நீக்கி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஒரே சீரான வரிவிதிப்புக்கு வகைசெய்யும் ஜிஎஸ்டி வரிவிதிப்பை அமல்படுத்த மத்திய அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

ஜிஎஸ்டி அமலுக்கு வரவிருப்பதால் கேரளாவில் பொழுதுபோக்கு வரி ரத்து செய்யப்படுவதாக கேரள அரசு அறிவித்துள்ளது,

கேரளாவில் சினிமா டிக்கெட் கட்டணத்தில் 25% பொழுதுபோக்கு வரி தற்போது அமலில் உள்ளது. மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பில், சினிமாவுக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த 25 சதவிகித கேளிக்கை வரியை கேரள அரசு ரத்து செய்துள்ளது.

ஜிஎஸ்டி அமல்படுத்த இருப்பதால், இரட்டை வரி வசூலிக்கவேண்டிய நிலைமை உண்டாகும். எனவே பொழுதுபோக்கு வரி ரத்து செய்யப்படுவதாக கேரள நிதியமைச்சர் டி.எம். தாமஸ் ஐசாக் அறிவித்துள்ளார்.

கேரள திரையுலகத்தை சேர்ந்தவர்களுடன் நடத்தி ஆலோசனைக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கேரள திரையுலகம் வருடத்துக்கு சுமார்  ரூ.500 அளவுக்கு கோடி வருமானம் கொண்டதாகவும், சராசரியாக ரூ. 4 கோடி செலவில் வருடத்துக்கு 130 படங்கள் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கேரள அரசின் இந்த கேளிக்கை வரி ரத்து  அறிவிப்பை கேரள  திரையுலகச் சங்கங்கள் வரவேற்றுள்ளன.