டில்லி

ரும் ஜி எஸ் டி கவுன்சில் கூட்டத்தில் வரி விகிதம் மூன்றடுக்காக மாற்றப்படும் எனவும் இதனால் மொபைல் விலை, விமானக் கட்டணம் உள்ளிட்டவை அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

கடந்த 2017 ஆம் வருடம் ஜூலை மாதம் ஜி எஸ் டி அமலாக்கம் செய்த போது இருந்து நான்கடுக்கு வரி விகிதம் உள்ளது.   இவை 5%, 12%, 18% மற்றும் 28% ஆகும்.  அதன் பிறகு ஒரு சில  பொருட்களுக்கு வரி விலக்கு வழங்கப்பட்டது.  பல பொருட்கள் குறைந்த வரி விகிதத்துக்கு மாற்றப்பட்டன.   அத்துடன் ஜிஎஸ்டி வரி விதிப்புக்கான வரம்பும் அதிகரிக்கப்பட்டது.

சமீப காலமாக ஜிஎஸ்டி வருவாய் பெருமளவில் குறைந்து வருகிறது.   நேற்று மத்திய நிதித்துறை துணை அமைச்சர் வெளியிட்ட தகவலின்படி கடந்த ஆறு மாதங்களில் எதிர்பார்த்ததை விட ஜி எஸ் டி வருமானம் 40% குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது.   ஏற்கனவே மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு வருமானம் குறைவால் நிறுத்தி வைத்துள்ளது.

இந்நிலையில் வரும் 18 ஆம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது.   ஏற்கனவே வரி வருமானம் அதிகரிக்கத் தேவையான ஆலோசனைகளை மாநில அரசிடம் இருந்து கவுன்சில் கோரி உள்ளது.   அந்த ஆலோசனைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இந்தக் கூட்ட்டத்தில் ஜி எஸ் டி வரி விகிதங்கள் மாறப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த தகவல்களின்படி இனி ஜி எஸ் டி 8%, 18% மற்றும் 28% என மாற்றப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.  இதனால் பிராண்டட் உணவு வகைகள்,  மொபைல்  போன்கள், பிட்சா, விமானக் கட்டணம், ஏசி ரெயில் கட்டணம், படகுச் சவாரி கட்டணம், பிரபல மருத்துவமனை கட்டணம், பட்டு போன்ற துணிவகைகள் விலை, ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டி விகிதங்கள் அதிகமாவதால் இந்த விலை மற்றும் கட்டணங்கள் அதிகரிக்க உள்ளதாகச் சொல்லப்பட்டுள்ளது.

அத்துடன் மேலே குறிப்பிடப்பட்ட பொருட்களைச் சாதாரண நிலையில் உள்ள பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துவதில்லை என்பதால் பாதிப்பு அதிகம் இருக்காது எனப் பெயர் தெரிவிக்க விரும்பாத அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.  மேலும் அவர்  ஜிஎஸ்டி வரி விகிதங்களை 8%, 185 மற்றும் 285 என அதிகரிக்க மத்திய அரசு உத்தேசித்துள்ள வேளையில் ஒரு சில மாநில அரசுகள் 15% என்னும் வரி விகிதத்தையும் சேர்க்கக் கோரிக்கை விடுத்துள்ளன எனவும் கூறி உள்ளார்.