கவுகாத்தி:

178 பொருட்கள் கொண்ட ஜிஎஸ்டி குறைப்பு பட்டியலில் சானிட்டரி நாப்கின் இடம்பெறாதது பெண்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 23-வது கூட்டம் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று நடந்தது. கவுன்சிலின் தலைவரான மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமை தாங்கினார். மத்திய அமைச்சர் சிவபிரசாத் சுக்லா, வருவாய் மற்றும் நிதித்துறை செயலாளர் ஹஸ்முக் அதியா, அனைத்து மாநில நிதியமைச்சர்கள், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

28 சதவீத வரிப் பட்டியலில் உள்ள 228 பொருட்களின் எண்ணிக்கை 50 ஆக குறைக்கப்பட்டது. அதாவது 178 பொருட்களின் மீதான வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டது. ஜி.எஸ்.டி. கவுன்சிலின் துணைக்குழு பரிந்துரை செய்திருந்ததை விட கூடுதலாக 12 பொருட்கள் மீது வரி குறைக்கப்பட்டது.

28 சதவீத வரி பட்டியலில் இருக்கும் பல்வேறு பொருட்களின் எண்ணிக்கையையும், வரி விகிதத்தை 18 சதவீதமாக குறைக்க கூட்டத்தில் ஒரு மனதாக ஒப்புக் கொள்ளப்பட்டது. அதன்படி 178 பொருட்கள் 18 சதவீத வரி வளையத்துக்குள் செல்கின்றன. மீதமுள்ள 50 பொருட்கள் மட்டுமே 28 சதவீத வரி பட்டியலில் உள்ளன.

குக்கர், ஸ்டவ், வாட்டர் ஹீட்டர், பேட்டரி, மூக்கு கண்ணாடி, காபி, விவசாய டிராக்டருக்கான சில பிரத்யேக பாகங்கள், சுவிங்கம், சாக்லெட், பற்பசை, ஷாம்பு, முகச்சவரத்துக்கு பின் பயன்படுத்தும் திரவங்கள், சோப்பு, சலவைத்தூள், பெண்களுக்கான அழகு சாதன மூலப்பொருட்கள், ஷேவிங் சோப் மற்றும் கிரீம், சத்து பானம், பிளாஸ்டிக் பொருள், மெத்தை.

சூட்கேஸ், காகிதம், எழுதுபொருள், கைக்கெடிகாரம், இசைக்கருவி, கிரானைட், மார்பிள், குளியல் அறை பீங்கான் பொருள், தோல் ஆடை, செயற்கை முடி, டோப்பா, வாகன மற்றும் விமான உதிரிபாகம் உள்ளிட்டவை அடங்கும். இந்த வரி குறைப்பு வரும் 15ம்ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. புகையிலை பொருள், பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏர்கண்டிஷனர், வாக்கம் கிளீனர் பெயின்ட், சிமென்ட், கார், இரு சக்கர வாகனம் ஆகியவற்றின் மீதான வரி தொடர்ந்து 28 சதவீதமாகவே நீடிக்கும்.

13 பொருட்களின் வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும், 5 பொருட்களின் வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. மேலும் தற்போது 5 சதவீத வரி விதிக்கப்பட்டு வரும் 6 பொருட்களுக்கு வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஜவுளி மற்றும் ஜவுளி பொருள் மீதான வரி 18ல் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. வெட் கிரைண்டர், கவச வாகனம் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

நட்சத்திர ஓட்டல்களின் உணவகங்களில் வரி 18 சதவீதமாக இருக்கும். இதற்கும் குறைவான அந்தஸ்து கொண்ட ஏசி வசதி கொண்ட மற்றும் ஏசி வசதி இல்லாத உணவகங்களில் இது ஒரே சீராக இருக்கும் விதத்தில் 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. அறை வாடகை ரூ.7,500க்கும் குறைவாக இருந்தால் மட்டுமே இந்த 5 சதவீத வரி பொருந்தும். பல முறை ஆன்லைனில் புகார் அளித்தும் சானிட்டரி நாப்கின்களுக்கான வரி 12 சதவீத்தில் இருந்து குறைக்கவில்லை. இது பெண்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது

‘‘ஜிஎஸ்டி.யை சரியான முறையில் அமல்படுத்தாதால் கடந்த 3 மாதத்தில் மத்திய அரசுக்கு ரூ. 60 ஆயிரம் கோடியும், மாநில அரசுக்கு ரூ. 30 ஆயிரம் கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது’’ என்று மேற்குவங்க நிதிமைச்சர் அமித் மித்ரா தெரிவித்துள்ளார்.