Random image

வெளிநாட்டு விமான பயண கட்டணத்துக்கு ஜிஎஸ்டி வசூலிப்பதுது விதிமீறல்…..ஐஏடிஏ தலைவர் குற்றச்சாட்டு

டில்லி:

சர்வதேச பயணங்களுக்கான விமான டிக்கெட்களுக்கு ஜிஎஸ்டி வசூலிப்பது விதிமுறைகளுக்கு புறம்பானது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சர்வதேச விமானநிலைய போக்குவரத்து சங்க (ஐஏடிஏ) தலைவர் அலெக்சாண்டரே டி ஜூனியாக் கூறுகையில்,‘‘வெளிநாட்டு விமான டிக்கெட்களுக்கு ஜிஎஸ்டி வசூலிப்பது ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பின் விதிமுறைகளை மீறும் நடவடிக்கையாகும். இதன் மூலம் விமானங்களுக்கு இடையிலான போட்டியை பலவீனப்படுத்தும். 2037ம் ஆண்டில் இந்திய விமான துறை 50 கோடி எண்ணிக்கை கொண்ட பயணங்களை மேற்கொள்ளும் வகையில் மாறும்’’ என்றார்.

மேலும், இந்திய விமான துறையில் நிலவும் கவலைகள் குறித்து தெரிவித்தார். குறிப்பாக அதிக வேக ஜெட் விமான எரிபொருள் விலை, உள்கட்டமைப்பு, விமான நிலையங்கள் தனியார் மயம் போன்றவற்றையும் அவர் குறிப்பிட்டார். சர்வதேச விமானநிலைய போக்குவரத்து சங்கத்தில் 280 விமான நிறுவனங்கள் உறுப்பினராக உள்ளது. ஏர் இந்தியா, ஜெர் ஏர்வேஸ், விஸ்தரா போன்றவையும் இதில் உறுப்பினர்.

எக்கனாமி மற்றும் பிஸ்னஸ் வகுப்பு டிக்கெட்களுக்கு 5 மற்றும் 12 சதவீத ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. ‘‘கடந்த 50 மாதங்களில் இந்திய விமான போக்குவரத்து துறை இரண்டு இலக்க வளர்ச்சியை அடைந்துள்ளது. இதை எளிதாக அடுத்த 50 மாதங்களுக்கும் தக்கவைக்கும்’’ என்று விமான போக்குவரத்து துறை செயலாளர் ஆர்.என்.சவுபே தெரிவித்துள்ளார்.