தொழில்நுட்ப ரீதியாக ஜிஎஸ்டி தோற்று விட்டது : நிதிச் செயலர்

டில்லி

தொழில் நுட்ப ரீதியாக எளிதான நடைமுறையில் ஜி எஸ் டி தோற்று விட்டதாக நிதிச் செயலர் ஹஷ்முக் ஆதியா தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் இந்தியாவில் ஜிஎஸ்டி அமுலாக்கப்பட்டது.    அதிலிருந்தே அந்த வரி முறைக்கு நாடெங்கும் எதிர்ப்பு எழுந்த வண்னம் உள்ளது.   வணிகர்கள் பலரும் தங்களின் வர்த்தகம் இந்த ஜி எஸ் டி முறையால் அழியும் நிலைக்கு வந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.   இந்த ஒரு வருட ஜிஎஸ்டி நடைமுறை குறித்து பல பொருளாதார வல்லுனர்கள் கடுமையான விமர்சனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நிதிச் செயலர் ஹஷ்முக் ஆதியா, “குறிப்பிட்ட கெடுவுக்குள் நாங்கள் ஜிஎஸ்டி அமுலாக்கம் செய்ய வேண்டி இருந்தது.  அதனால் நாங்கள் வரிக்கணக்கு அளித்தல் உள்ளிட்ட பல தொழில்நுட்பங்களில் சிறிது தவறி விட்டோம்   அதனால் இந்த ஜிஎஸ்டி தொழில்நுட்ப ரீதியாக எளிதாக இருக்க வேண்டியதில் தோல்வி அடைந்துள்ளது.   அதே நேரத்தில் ஜிஎஸ்டி முழுமையாக தோல்வி அடையவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏற்கனவே இந்த ஜிஎஸ்டி நடைமுறைகளை எளிதாக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.   அவைகளில் ஈடுபட்டோருக்கு நான் பாராட்டுக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.  அதையும் மீறி ஒரு சில ஜிஎஸ்டி முறைகள் தோல்வி அடைந்துள்ளன.    நாங்கள் இந்த முறைகளை எளிதாக்க மேலும் முயற்சிகள் எடுத்து வருகிறோம்.   அதற்கு இன்னும் நிறைய மாறுதல்கள் செய்ய வேண்டி உள்ளது.   விரைவில் அதில் வெற்றி பெறுவோம்” என தெரிவித்துள்ளார்.