ஜிஎஸ்டி.யை முற்றிலும் பழுது பார்த்து மாற்றி அமைக்க வேண்டும்!! மத்திய அரசு செயலாளர்

டில்லி:

‘‘ஜிஎஸ்டி.யை முற்றிலும் பழுது பார்த்து மாற்றி அமைக்க வேண்டும்’’ என்று வருவாய் துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,‘‘ கலால், சேவை வரி, வாட் போன்ற மத்திய மாநில அரசுகளின் 12க்கும் மேற்பட்ட வரி விதிப்புகள் ஒன்றாக இணைக்கப்பட்டு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை நிலைப்படுத்த ஒரு ஆண்டு ஆகும்.

அமல்படுத்தப்பட்டு 4 மாதங்களில் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. இதை ஜிஎஸ்டி கவுன்சில் எதிர்கொண்டு தீர்வு ஏற்படுத்தி வருகிறது. நடுத்தர மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் வரி செலுத்தவும், கணக்கு தாக்கல் செய்வதையும் எளிமைபடுத்த வேண்டும். தொழில் நலன் சார்ந்த வகையில் இதை மாற்றி அமைக்க வேண்டும்’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘100 பொருட்களின் விலையை ஜிஎஸ்டி கவுன்சில் மாற்றி அமைத்து ஏற்றுமதியாளர்களுக்கு எளிமையாக்கியுள்ளது. எனினும் முற்றிலும் பழுது நீக்கி மாற்றி அமைக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இது சாத்தியமாகும். சில குறிப்பிட்ட பொருட்கள் ஒரே தொகுப்பின் கீழ் பிரிந்து உள்ளது. கணக்கீடு முறையில் இந்த குறைபாடுகளை களைய வேண்டும்.

சிறு மற்றும் நடுத்த நிறுவனங்கள், சாதாரண மனிதர்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இதை அகற்ற வேண்டும். இதை செய்தால் தான் புகார் இல்லாத ஜிஎஸ்டி விதிப்பு முறையை செயல்படுத்த முடியும். இதற்காக அடுத்த ஒரு மாதத்தில் ஆலோசனை மேற்கொண்டு கவுகாத்தியில் அடுத்து நடக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலோ அல்லது அதன் பின் நடக்கும் கூட்டத்திலோ இதற்கான நல்ல தீர்வு கிடை க்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

23வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் வரும் நவம்பர் 10ம் தேதி கவுகாத்தியில் நடக்கிறது. இதில் அனைத்து மாநில பிரதிநிதிகளும் கலந்துகொள்கின்றனர்.

ஆதியா மேலும் கூறுகையில், ‘‘இது அனைவருக்கு புதிய நடைமுறையாகும். ஜிஎஸ்டி.யை முற்றிலும் மாற்றி அமைக்க ஒரு ஆண்டு காலமாகும். வாட் அமல்படுத்தப்பட்ட போதும் ஒரு ஆண்டுக்கு எதிர்ப்பு இருந்தது. வாட் என்றால் என்ன என்றே தெரியாமல் அப்போது மக்களே சாலைகளில் இறங்கி போராடினர்.
ஜிஎஸ்டி.யை விட அதற்கு எதிர்ப்பு அதிகளவில் இருந்தது.

2005ம் ஆண்டு இதர வரி விதிப்பு முறைகளை மாற்றிவிட்டு வாட் கொண்டு வரப்பட்டது. மாநிலத்துக்குள் நடக்கும் விற்பனை மற்றும் கொள்முதலுக்கு விதிக்கப்படும் வரி தான் வாட். 12க்கும் மேற்பட்ட வரி விதிப்புகளை ஒன்றாக்கி தற்போது ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவையை ஒரே ச ந்தைக்குள் தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது’’ என்றார்.