“குழந்தைகள் வண்ணம் தீட்டும் புத்தகங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது.  அதே நேரம் ஆபாச புத்தகங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது” என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

ஜூலை 1ம் தேதியிலிருந்து நாடு முழுதும் ஜி.எஸ்.டி. வரி விதிப்புஅமலாக இருக்கும் நிலையில் அந்த வரி குறித்து கடும் வாதப் பிரதிவாதங்கள் நடந்து  வருகின்றன.

இந்த நிலையில்  ஜி.எஸ்.டி வரிவிதிப்பு குறித்து இன்னுமொரு விவாதம் எழுந்துள்ளது.

இது குறித்து இந்தியாவில் கல்வித்துறை புத்தகங்களை  வெளியிடும் பதிப்பகங்கள் கூட்டமைப்பு (எப்இபிஐ) தெரிவித்துள்ளதாவது:

“குழந்தைகளுக்கான வண்ணம் தீட்டுதல் புத்தகங்களுக்கு மத்திய அரசு 12 சதவீத ஜி.எஸ்.டி.  வரி விதித்திருக்கிறது. இதனால் குழந்தைகளுக்காக வாங்கப்படும் இந்த புத்தகங்களின் விலை உயரும்.

அதே நேரம்  அரை ஆபாச புத்தகங்களுக்கு ஜி.எஸ்.டி. யிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது” என்று எப்இபிஐ குற்றம் சாட்டியிருக்கிறது.

குழந்தைகளுக்கான புத்தகங்கள் மீதான ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை உடனடியாக மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்று  எப்இபிஐ அமைப்பின் பொருளாளர் சுபாஷ் கோயல் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த பதிப்பக அமைப்பின் தலைவர் ஆர;.கே. குப்தாவும் இதே கோரிக்கையுடன் பிரதமருக்கும், நிதி அமைச்சருக்கும் கடிதம எழுதியுள்ளார்.

மேலும் இந்த அமைப்பினர், “வண்ணம் தீட்டும் புத்தகங்களை 12 வயதிற்குட்பட்ட மாணவர்களே பயன்படுத்துகின்றனர். அவர்கள் ஒரு முறை மட்டும் இதை வாங்குவதில்லை. அவர்கள் இந்த வயதில் புத்தகத் தாள்களை கிழிக்கக் கூடியவர்களாகவும் நிறைய தாள்களை வீணாக்குவதாலும் இருப்பதால் குறைந்தது நான்கு புத்தகங்களுக்கு மேல் வாங்குபர;களாக இருக்கிறார்கள். எனவே இந்த வரிவிதிப்பு பெற்றோர்களுக்கு மேலும் சுமையை தருகிறது. எனவே இந்த கல்வியாண்டிலேயே, வண்ணம் தீட்டும் புத்தகங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பை தளர்த்த வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளனர்.