குஜராத் தேர்தலுக்காக ஜிஎஸ்டி குறைப்பு: ப.சிதம்பரம் கடும் தாக்கு

சென்னை,

சாமில் இன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 177 பொருட்களுக்கு வரி குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குஜராத் தேர்தலை கணக்கில்கொண்டே, ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சராக ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நாடு முழுவதும் கடந்த ஜூலை மாதம் ஜிஎஸ்டி வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக பாஜக அமைச்சர்கள் முதல் எதிர்க்ட்சியினர், தொழில் வல்லுநர்கள், ஆடிட்டர்கள் குற்றம் கூறி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து, மாதா மாதம் ஜிஎஸ்டி கவுன்சில் கூடி இதுகுறித்து முடிவு செய்யும் என்றும், அப்போது ஜிஎஸ்டியில் எந்த பொருட்களுக்கு வரி மாற்றம் செய்யலாம் என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜிஎஸ்டி கவுன்சிலின் 23வது கூட்டம் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கவுன்சிலில் இடம்பெற்றுள்ள மாநில அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இன்றைய கூட்டத்தின்போது, வரி திருத்தம் மற்றும் குறைக்கப்பட வேண்டிய பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில், 177 பொருட்களுக்கு வரி குறைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், குஜராத் சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்தே மோடி அரசு ஜிஎஸ்டி குறைக்க முன்வந்துள்ளது என்று கூறி உள்ளார்.

மேலும்,  ஜிஎஸ்டி வரி விதிப்பால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை பலமுறை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டி வந்துள்ளது. இதன் காரணமாக மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அடுத்த மாதம் நடைபெற இருக்கும்  குஜராத் சட்டமன்ற  தேர்தல் காரணமாகவும் ஜிஎஸ்டி வரி விகிதங்களில் மாற்றங்கள் செய்ய தற்போது மத்திய அரசு முன் வந்துள்ளது.

மத்திய அரசு ஜிஎஸ்டியை மோசமான நிலையில் அமல்படுத்தியதால், நாட்டில் மிகப்பெரிய அளவில் வரி சீர்த்திருத்தம் செய்யும் வாய்ப்பு பறிபோய் விட்டது என்று ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநில நிதி அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர் என்பதை சுட்டிக்காட்டிய சிதம்பரம்,   ஜிஎஸ்டி மசோதா மாநிலங்களவையில் விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டது என்பதையும் தெரிவித்தார்.

ஆனால் மக்கள் மன்றத்திலும், ஜிஎஸ்டி கவுன்சிலிலும் இதுகுறித்து விவாதிப்பதை மத்திய அரசால் தடுக்க முடியாது என்றும் கூறினார்.