ஜி எஸ் டி வரி விகித சீரமைப்பு : விரைவில் வரி விகிதம் அதிகரிக்க வாய்ப்பு

டில்லி

ஜி எஸ் டி வரி விகிதத்தில் சீரமைப்பு செய்யப்பட உள்ளதால் விரைவில் ஜி எஸ் டி வரி விகிதங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2017 ஆம் வருடம் ஜூலை மாதம் 1 ஆம் தேதி நாடெங்கும் ஜி எஸ் டி வரி அமலாக்கப்பட்டது.    கடந்த இரண்டரை ஆண்டுகளில் இந்த வரி விகிதங்களில் பல மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன.   தற்போது குறைந்த பட்ச வரி விகிதமாக 5% உள்ளது.  அத்துடன் பெரும்பாலான பொருட்கள் 12% மற்றும் 18% வரி விகிதத்தில் உள்ளன. கடந்த சில மாதங்களாக ஜிஎஸ்டி வருமானம் குறைந்து வருகிறது.

ஜிஎஸ்டிக்கு கீழ் வரும் மாநிலங்களுக்கு மத்திய அரசு இழப்பீடு அளித்து வருகிறது. அந்த இழப்பீடு சில மாதங்களாக அளிக்கப்படுவதில்லை என டில்லி, பஞ்சாப், மேற்கு வங்கம், கேரளா, மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகள் குற்றம் சாட்டி உள்ளன.   இதற்கு இந்த வருடம் போதுமான அளவு ஜிஎஸ்டி வருமானம் இல்லாததால் இழப்பீடு வழங்க இயலவில்லை என மத்திய அரசு தெரிவித்தது.

அத்துடன் ஜிஎஸ்டி வருமானம் அதிகரிக்க யோசனை தெரிவிக்க மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.   இந்த கருத்துக்கள் வரும்18 ஆம் தேதி நடைபெற உள்ள ஜி எஸ் டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது   அத்துடன் வருமானத்தை அதிகரிக்க ஜிஎஸ்டி வரிவிகிதத்தை அதிகரிப்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.

தற்போது 12% மற்றும் 18% வரி விகிதத்தில் உள்ள பொருட்களை 15% என்னும் ஒரே வரி விகிதத்தில் கொண்டு வர கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாகச் சொல்லப்படுகிறது.   அத்துடன் தற்போது வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள பொருட்களில் சில வரி விகிதத்துக்குள் எடுத்து வரவும் ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

கார்ட்டூன் கேலரி