குட்கா விவகாரம்: சிபிஐ சோதனையை தொடர்ந்து அமலாக்கத்துறையும் விசாரணை
சென்னை:
தடை செய்யப்பட்ட குட்காவை தமிழகத்தில் திருட்டுத்தனமாக விற்பனை செய்ய அனுமதி அளித்த விவகாரம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக 40 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தி வந்த நிலையில், தற்போது அமலாக்கத்துறையும் விசாரணையில் இறங்கி உள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தமிழகத்தில் குட்கா, பான் மசாலா போன்ற பொருட்கள் விற்பனைக்கு தடை செய்யப்பட்டன. இதையடுத்து சென்னை மதுரவாயலில் உள்ள ஒரு குடோனில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த குட்கா பொருட்களை வருவாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அப்போது குட்கா உரிமையாளர் மாதவராவ் வைத்திருந்த ரகசிய டைரி கண்டெடுக்கப்பட்டது.
அந்த டைரியில் உள்ள தகவலின்படி, இந்த முறைகேட்டில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பிவி ரமணா மற்றும் முன்னாள் கமிஷனர் ஜார்ஜ், டிஜிபி ராஜேந்திரன் வீடுகள் உள்பட 40 இடங்களில் சிபிஐ ரெய்டு நடத்தி ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இது தொடர்பாக இதுவரை 7 பேரை சிபிஐ கைது செய்து உள்ளது.
இந்நிலையில் குட்கா விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் மூலம் ரூ 60 கோடி மோசடி நடந்ததாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது. சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றப்பட்ட ஆவணங்களைக் கொண்டு தற்போது அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக குட்கா வழக்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.