குட்கா முறைகேடு விவகாரம்: மாதவராவை குடோனுக்கு அழைத்துச் சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை
சென்னை:
தடை செய்யப்பட்ட குட்காவை தமிழகத்தில் திருட்டுத்தனமாக விற்பனை செய்த விவகாரத்தில் சிபிஐ 5 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக குட்கா முறைகேட்டில் ஈடுபட்ட மாதவராவை சிபிஐ அதிகாரிகள் குடோனுக்கு நேரில் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.
செங்குன்றத்தில் உள்ள அவரது கிடங்குக்கு அழைத்துச் சென்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2013-ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தமிழகத்தில் குட்கா, பான் மசாலா போன்ற பொருட்கள் விற்பனைக்கு தடை செய்யப்பட்டன. இதையடுத்து சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு குடோனில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த குட்கா பான் மசாலா போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை வருவாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அப்போது குட்கா உரிமையாளர் மாதவராவ் வைத்திருந்த ரகசிய டைரி கண்டெடுக்கப்பட்டது.
இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், குட்கா குடோன் உரிமையாளர் மாதவராவ், அவரது இரு பங்குதாரர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை சி.பி.ஐ. அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அவர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்பட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று விடிய விடிய விசாரணை மற்றும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் சிபிஐ அதிகாரிகள்.
இந்நிலையில் குட்கா குடான் உரிமையாளர் மாதவராவை செங்குன்றம் தீர்த்தங்கரையன்பட்டு பகுதியில் உள்ள அவரது கிடங்குக்கு அழைத்துச் சென்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவ ரிடம், லஞ்சப்பணம் யார் யாருக்கு எவ்வளவு கொடுக்கப்பட்டது என சிபிஐ அதிகாரிகள் விசாரித்ததாக கூறப்படுகிறது.
நேற்று மாதவராவின் உதவியாளரிடமும், அவரது மேலாளர்கள் 4 பேர் மற்றும் உறவினர்கள் 2 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அவர்கள் அளித்த தகவலின் பேரில் மாதவராவை கிடங்குக்கு அழைத்துச் சென்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.