குட்கா விசாரணை: முதல்வருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு!

சென்னை:

குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை திடீரென  சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டில் குட்கா, பான்மசாலா போன்ற புகையிலை  பொருட்கள் விற்ப னைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்,  தடையை மீறி திருட்டுத்தனமாக விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டதாகவும், இதில் ரூ.40 கோடி வரை லஞ்சம் பெறப்பட்டதாகவும் புகார் கூறப்பட்டது.

இந்த லஞ்சப்பணம் யார் யாருக்கு கொடுக்கப்பட்டது என்பது குறித்து, குட்பா வியாபாரி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட டைரியில் தெரிய வந்ததாகவும், அதன்படி, இந்த முறைகேட்டில்,  சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா, போலீஸ் அதிகாரிகள் டி.கே .ராஜேந்திரன், முன்னாள் ஆணையர் ஜார்ஜ் உள்பட பலர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

இது தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், குட்கா குடோன் உரிமையாளர் மாதராவ் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதன் அடுத்தக் கட்டமாக கடந்த ஒருவாரமாக அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் சரவணன், முன்னாள் அமைச்சர் ரமணா ஆகியோருக்கு சம்மன் அனுப்பி வரவழைக்கப்பட்டு விசாரணை நடை பெற்று வருகிறது.

அமைச்சர் விஜயபாஸ்கரிடம்  2 நாட்கள் விசாரணை நடைபெற்றுள்ள நிலையில், இன்று காலை திடீரென முதல்வரின் கிரின்வேஸ் சாலை வீட்டுக்கு வந்த அமைச்சர் விஜயபாஸ்கர் முதல்வரிடம் தனியாக ஆலோசனை நடத்தினார். இருவரும் நீண்ட நேரம் தனியாக பேசிக்கொண்டிருந்தனர். இதன் காரணமாக  தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி