குட்கா விவகாரம்: உரிமைக்குழு நோட்டீசுக்கு திமுக பதில் கடிதம்!

சென்னை:

குட்கா விவகாரத்தில் சட்டசபை உரிமைக்குழுவின் நோட்டீசுக்கு திமுக எம்எல்ஏக்கள் 8 பேர் இன்று நேரில் சபாநாயகரிடம் பதில் கடிதம் அளித்தனர்.

சட்டமன்றத்திற்குள் தடை செய்யப்பட்ட குட்கா கொண்டு வரப்பட்டது குறித்து உரிமைக்குழு விசாரணை நடத்தி, திமுக எம்எல்ஏக்கள் 21 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பியது. இன்றுடன் அதற்கான காலக்கெடு முடிவடைவதால் திமுக எம்எல்ஏக்கள் சார்பாக 8 பேர் இன்று சபாநாயகரிடம்  பதில் கடிதம் கொடுத்தனர்.

அதில், நோட்டீஸ் குறித்து பதில் அளிக்க மேலும் 15 நாட்கள் அவகாசம் கேட்டுள்ளதாக  கூறப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களுடன் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், சட்டசபைக்கு குட்காவை கொண்டு வந்தது தொடர்பாக தங்களுக்கு வந்த நோட்டீஸ் குறித்து 21 எம்.எல்.ஏ.,க்கள் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். அவர்கள் அனுப்பிய நோட்டீசில், உரிமை பிரச்னை இல்லை. இருப்பினும், சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து, விரிவான பதில் அளிக்க 15 நாள் அவகாசம் தேவை என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும்,  திமுக எம்எல்ஏ-க்களுக்கு நோட்டீஸ் அனுப்ப எடப்பாடி அரசுக்கு உரிமை இல்லை எனவும் எடப்பாடி அரசு பெரும்பான்மையை  இழந்துவிட்டதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று நடந்த அதிமுக கூட்டத்தில், 109 எம்.எல்.ஏ.,க்கள் தான் கலந்து கொண்டுள்ளனர். ஆட்சி நடந்த இவர்களின் ஆதரவு மட்டும் போதுமா?

இவ்வாறு அவர் கூறினார்.

ஆனால் சபாநாயகர் தனபால், மேலும் கால அவகாசம் தர முடியாது என்று   திமுக உறுப்பினர்க ளின் கோரிக்கையை நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக திமுக எம்எல்ஏக்கள் மீது விரைவில் அதிரடி நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில் இந்த விவகாரம் குறித்து சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி