வாஷிங்டன்

மெரிக்க அதிபர் தேர்தல் இவ்வாண்டு நவம்பர் மாதம் 3-ம் தேதி நடக்க உள்ள நிலையில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் மற்றும் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இரண்டாவது முறையாக போட்டியிடும் டிரம்ப் ஜனவரி மாதம் முதல் தனது தேர்தல் பிரச்சாரத்தை நடத்திவருகிறார், கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் மாதம் முதல் நிறுத்திவைத்திருக்கும் இவரது பிரச்சார கூட்டங்களை மீண்டும் துவங்க இருக்கிறார், கடைசியாக மார்ச் 2 ம் தேதி இவரது பிரச்சார கூட்டம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனநாயக கட்சி வேட்பாளராக பிடன் ஏப்ரல் மாதத்தில் தான் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதால் இனி தான் அவர் தனது தேர்தல் பிரச்சார கூட்டத்தை துவக்கவேண்டிய நிலையில் உள்ளார்.

இருந்தபோதும், கொரோனா வைரஸ், ஊரடங்கு ஆகிய பிரச்சனைகளில் டிரம்ப் நிர்வாகம் திறம்பட செயல்படாத காரணத்தால் டிரம்பின் ஆதரவு சரிந்து வந்தது. இந்நிலையில் மே 25 ம் தேதி நடந்த கருப்பு இன இளைஞர் ஜார்ஜ் பிளாயிடின் உயிரிழப்பு டிரம்புக்கு மேலும் சரிவை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க மக்கள்தொகையில் பெரும்பான்மையாக இருக்ககூடிய வெள்ளை இனத்தவரின் அமோக ஆதரவை எப்பொழுதும் பெற்றுவரும் டிரம்பின் குடியரசு கட்சி, டிரம்பின் தவறான முடிவகளால் தனது வாக்குவங்கியில் பெரும் பிளவை சந்தித்துள்ளது.

கருப்பினத்தவர் மற்றும் பொதுவானவர்களின் வாக்குகளை மட்டுமே நம்பியிருந்த ஜனநாயக கட்சிக்கு, டிரம்பின் இந்த சரிவு, பிராச்சரத்திற்கு செல்லாமலேயே தங்கள் வாக்கு சதவீதம் அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளித்திருக்கிறது. அதுபோல், அமெரிக்கா வாழ் இந்தியர்கள் உள்ளிட்ட ஆசியர்களும் டிரம்புக்கு எதிராக வாக்களிக்க போவதாக கூறிவருகிறார்கள்.

இந்நிலையில், அடுத்த வாரம் ஜீன் 19ம் தேதி மீண்டும் தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கும் டிரம்ப். துல்சா நகரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரும் 19000 பேரும் கொரோனா வைரசிலிருந்து தங்களை பாதுகாத்துகொள்ளவது பார்வையாளர்களின் பொறுப்பு என்றும் இதில் கலந்துகொள்பவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அதற்கு தாமோ தமது கட்சியோ அல்லது இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் யாரும் பொருப்பாக மாட்டார்கள் என்று பொருப்பு துறப்பு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

கடந்த வாரம் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அதிபர் டிரம்ப் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பெருமளவு கட்டுப்படுத்தபட்டதாகவும் அதனால் தான் உயிரிழப்பு 1 லட்சம் எண்ணிக்கையில் இருப்பதாகவும், இல்லையென்றால் அது பத்து அல்லது இருபது லட்சமாக சென்றிருக்ககூடும் என்று தனது அரசின் நிர்வாகத்தை பற்றி பெருமைபட கூறியிருந்தார்.

இந்நிலையில் தனது தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் தனது ஆதரவாளர்களின் உயிருக்கும் மருத்துவ பாதுகாப்பிற்கும் உத்திரவாதம் இல்லையென்று கைகழுவியிருப்பது அவரது ஆதரவாளர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், டிரம்பின் தேர்தல் நிர்வாகிகள் 19,000 மட்டுமே கலந்து கொள்ள கூடிய இந்த நிகழ்ச்சியில் பங்குகொள்ள இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வம் காட்டியுள்ளதாக கூறிவருகிறார்கள்.