உணவை வீணாக்கினால் எடை போட்டு கட்டணம் வசூல்… கூர்க் விடுதியின் அசத்தல் நடவடிக்கை …

பெங்களூரு:

 

வியர்வை சிந்தி விவசாயம் செய்யும் நாட்டில் உணவு வீணாவது, விவசாய சக்தி விழலுக்கு இறைத்த நீராக உள்ளதோ என்று வேதனையளிக்கிறது.

இந்தநிலையை கருத்தில் கொண்டுதானோ என்னவோ கர்நாடக மாநில கூர்க் மாவட்டம்,  மடிகேரியில் உள்ள ‘இப்ணி ரெசார்ட்ஸ்’, தங்கள் விடுதியில் தங்கி உணவை வீணாக்கும் விருந்தினர்களிடம் அவர்கள் வீணாக்கும் ஒவ்வொரு 10 கிராமுக்கு 100 ரூபாய் கட்டணமாக வசூலிக்கிறது.

தங்கள் விடுதியில் வீணாகும் உணவின் அளவை குறைக்க பல்வேறு நடவடிக்கை எடுத்த ‘இப்ணி ரெசார்ட்ஸ்’ நிர்வாகம் கடந்த 6 மாதங்களாக இப்படி  கட்டணம்  வசூலித்து வருவதாகவும். இந்த நடவடிக்கைக்குப்பின் உணவு வீணாவது வெகுவாக குறைந்திருப்பதாகவும் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

ஒவ்வொரு நாளும் 14 குப்பை தொட்டியளவு உணவுப்பொருட்கள் வீணான நிலையில், உணவின் அளவை குறைத்து வழங்க முதலில் முடிவெடுத்து வழங்கிய நிலையில், அந்த  நடவடிக்கையும் பலன்தராததால்.

வீணாகும் உணவுக்கு பணம் வசூலிக்க முடிவு செய்து 10 கிராமிற்கு 100 ரூபாய் விருந்தினர்கள் கண்முன்னே எடைபோட்டு கட்டணம் வசூலிக்க ஆரம்பித்த பிறகு, தற்பொழுது நாள் ஒன்றுக்கு  ஒரு குப்பை தொட்டியளவே உணவுப்பொருள் வீணாவதாக சொல்கிறது.

இதுபோன்று வசூலிக்கப்படும் கட்டணத்தை மடிகேரியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவளிக்க பயன்படுத்துவதாகவும், விருந்தினர்கள் அதற்கென உள்ள உண்டியலில் பணம் செலுத்தவும் நிர்வாகம் நடவடிக்கையெடுத்துள்ளது.

சாப்பிடற சாப்பாட்டை வீணாக்காதே, கீழே இறைக்காமல்  சாப்பிடு, சாப்பாட்டுக்கு மரியாதை கொடு என்று பெரும்பாலான பெற்றோர்களும் தாத்தா பாட்டிகளும் பிள்ளைகளுக்கு அறிவுறுத்தும் நிலையில், தேவையானவற்றை தேவையான அளவு வாங்கி வீணாக்காத  வரை இது போன்ற அபராதம் தான் கைகூடும் என்றால் இதையும் வரவேற்கத் தானே வேண்டும்.