சென்னை: ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, 2021ம் ஆண்டில், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த வழிகாட்டு நெறிமுறைகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன் படி தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் விவரம் வருமாறு:

ஒரு காளையுடன் உரிமையாளர், ஒரு உதவியாளருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காளையுடன் வருபவர்கள் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் என்று சான்று பெற்றிருக்க வேண்டும். ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வட நாடு நிகழ்ச்சிகளில் அதிக பட்சமாக 300 பேர் வரை கலந்துகொள்ளலாம்.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு 7 நாட்களுக்கு முன்பு பதிவு செய்து அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். போட்டிகளை காண 50 சதவீதம் பார்வையாளர்களே அனுமதிக்கப்படுவர். அதேபோன்று போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் என சான்று பெற்றிருக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு போட்டியை மேற்பார்வை செய்யும் அலுவலர்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு பரிசோதனை கட்டாயம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் அறிவிப்பு ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து ஜல்லிக்கட்டு  நடத்தும் ஏற்பாடுகள் சுறுசுறுப்படைந்து உள்ளன.