குஜராத்: ஜி.எஸ்.டி.,க்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் , நூதன பிரச்சாரம்

சூரத்: 

பிரபல இந்திப்படமான ஷோலே படத்தில் வரும்  வில்லன் கப்பார் சிங்  போல வேடமிட்டு, காங்கிரஸ் கட்சியினர் வித்தியாசமான போராட்டத்தை குஜராத்தில் நடத்தினர்.

குஜராத் மாநல சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க இருக்கிறது. இதையடுத்து அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இதில் காங்கிரஸ் கட்சி நூதனமான பிரச்சாரங்களை நடத்தி வருகிறது.  மத்திய பாஜக அரசின் திட்டங்களான ரூபாய் நோட்டு வாபஸ் மற்றும் ஜி.எஸ்.டி., திட்டத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின்  துணைத்  தலைவர் ராகுல் காந்தி, ஜி.எஸ்.டி.,யை, பிரபல ஹிந்தி படமான ‛ஷோலே’ திரைப்பட வில்லனான கப்பார் சிங் கதாபத்திரத்துடன் ஒப்பிட்டு, ‛கப்பார் சிங் டாக்ஸ்’ என குறிப்பிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் காங்கிரஸ் , கட்சியினர் ஜி.எஸ்.டி.,க்கு எதிர்ப்பு தெரிவித்து சூரத் நகரில் நூதனமான முறையில் பிரசாரத்தில் ஈடுபட்டனர். ஷோலே திரைப்படத்தில் வருவது போல கப்பார் சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் போல் வேடமணிந்து, துப்பாக்கி ஏந்தியபடி குதிரையில் சூரத் நகரை வலம் வந்து பிரசாரம் செய்தனர்.