குஜராத் மாநிலத்தில் 2021 மார்ச் 1 முதல் மே மாதம் 10 ம் தேதி வரையிலான 71 நாட்களில் 1,23,871 பேர் இறந்துள்ளதாக இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது, ஆனால் கொரோனாவால் 4,218 பேர் மட்டுமே உயிரிழந்ததாக அரசு பதிவேட்டில் குறிப்பிடபட்டுள்ளதாக குஜராத்தி நாளேடு தெரிவித்திருக்கிறது.

மார்ச் மாதம் 26,026 பேரும், ஏப்ரல் மாதம் 57,796 பேரும் மே மாதம் 10ம் தேதி வரை 40,051 பேரும் இறந்திருப்பதாக அந்த பதிவேட்டில் குறிப்பிடபட்டுள்ளது.

இறந்தவர்களில் பலர் மாரடைப்பு, ரத்தகொதிப்பு உள்ளிட்ட பல்வேறு இணைநோய்கள் காரணமாக இறந்துள்ளதால் அவை கொரோனா மரணமாக கணக்கிடப்படவில்லை. 4218 பேர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்று புள்ளியியல் துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

கடந்த 2020ம் ஆண்டு இதே காலகட்டத்தில் 58,078 பேர் மட்டுமே அதாவது 2020 மார்ச் மாதம் 23,352 பேரும் ஏப்ரல் மாதம் 21,591 பேரும் மே மாதம் 13,125 பேரும் உயிரிழந்திருக்கின்றனர்.

கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இவ்வாண்டு அதே காலகட்டத்தில் 71 நாட்களிலேயே உயிரிழப்பு இருமடங்கு அதிகரித்திருக்கிறது.

இந்த 71 நாட்களில் அகமதாபாத் நகரில் அதிகபட்சமாக 13593 இறப்பு சான்றுகள் வழங்கப்பட்டுள்ளது இங்கு 2126 பேருக்கு மட்டுமே கொரோனா மரணம் என்று கூறப்பட்டுள்ளது.

முக்கிய நகரங்களில் நிகழ்ந்த மொத்த மரணம் மற்றும் கொரோனா மரணம் குறித்த விவரம் :

ராஜ்கோட் 10887 – 288
சூரத் 8851 – 1074
வடோதரா 7722 – 189

https://twitter.com/noopurpatel_/status/1393089036609196037

கொரோனா உயிரிழப்பை விட இணைநோய் காரணமாக முப்பது மடங்கு அதிகப்படியான உயிரிழப்பு ஏற்பட்டதாக சொல்லப்படும் நிலையில் எந்தெந்த நோய் காரணமாக எத்தனை பேர் மரணமடைந்தார்கள் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று அநத செய்தியில் குறிப்பிடபட்டுள்ளது.

இறந்தவர்களின் பெயரில் உள்ள சொத்து மற்றும் உடைமைகளுக்கு உரிமை கொண்டாடும் நோக்கில் வாரிசு சான்று பெருவதற்கே பெரும்பாலும் இறப்பு சான்றுகள் பெறப்படுவதால் அவ்வாறு உடைமையோ வாரிசோ இல்லாத அனாதை பிணங்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று நம்பப்படுகிறது.

மேலும், கொரோனா பாதிப்பால் குஜராத் மாநிலம் சின்னாபின்னமாகி முடங்கிப்போயுள்ளதால் இங்குள்ள ஜவுளி, செராமிக் டைல்ஸ் உள்ளிட்ட தொழில்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.