இரண்டு கட்டமாக குஜராத் சட்டமன்ற தேர்தல்! தேதி அறிவிப்பு

டில்லி,

குஜராத் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. தலைமை தேர்தல் அதிகாரி அச்சல் குமார் ஜோதி தேர்தல் நடைபெறும் தேதி மற்றும் வாக்கு எண்ணிக்கை தேதியையும் அறிவித்தார்.

182 சட்டப்பேரவை தொகுதிகளை உடைய  குஜராத் மாநிலத்தில் தற்போது பாரதியஜனதா தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையின்  இதன்  ஆயுட்காலம் ஜனவரி 22, 2018 அன்றுடன் முடிவடைகிறது.

அதையடுத்து அங்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தலைமை தேர்தல் அதிகாரி குஜராத் வாக்குபதிவு தேதியை அறிவித்தார்.

அதன்படி, டிசம்பர் 9ந்தேதி மற்றும் 14ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும்.

முதல் கட்டமாக டிசம்பர் 9ந்தேதி 89 தொகுதிகளுக்கும்,  இரண்டாவது கட்டமாக 93 தொகுதிகளுக்கு டிசம்பர்  14ந்தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும் என்றும்,

டிசம்பர் 18ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் கூறி உள்ளார்.

கடந்த தேர்தலை விட   இந்த தடவை அதிக வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்படும் என்றும், வாக்கு பதிவு மையங்களின் எண்ணிகை  50,128 ஆகவும்,  போதுமான அளவு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பொருத்தப்படும்,  யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வகையில் ஒப்புகை சீட்டு வழங்கப்படும்.

பெண்களே நிர்வகிக்கும் வகையில் முழுவதும் பெண்களுக்கான வாக்குப்பதிவு மையங்கள் ஏற்படுத்தப்படும், ஒவ்வொரு வேட்பாளரும் தொகுதிக்கு ரூ28 லட்சம் செலவு செய்ய மட்டுமே அனுமதி உண்டு என்றும், வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை பறக்கும் படையினர் கண்காணிப்பார்கள் என்றும் கூறினார்.

இன்றுமுதல் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வருவதாகவும், வாக்குச்சாவடிகள் சிசிடிவி காமிரா மூலம் கண்காணிக்கப்படும் என்றும் கூறினார்.

கடந்த 12ந்தேதி இமாச்சல பிரதேச தேர்தல் தேதி குறித்து அறிவித்த தேர்தல் ஆணையம்,   குஜராத்துக்கு தேர்தல் தேதி அறிவிக்காதது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.  காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். முன்னாள் தேர்தல் கமிஷனரும் குற்றம் சாட்டியிருந்தார்.

மோடியின் குஜராத் சுற்றுப்பயணம் மற்றும்  சலுகை அறிவிப்புக்காக தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல், மத்திய அரசுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று பகிரங்கமாக  குற்றம் சாட்டப்பபட்டது.

இதற்கிடையில் கடந்த வாரம் குஜராத் சென்ற பிரதமர் மோடி ஏராளமான சலுகைகளையும், பல புதிய திட்டங்களையும் தொடங்கிவைத்தார்.

இந்நிலையில் இன்று குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணைய தலைவர் அச்சல்குமார் ஜோதி அறிவித்தார்.

ஆர்.கே.நகர் தேர்தல் தேதி இரட்டை இலை விவகாரத்தில் முடிவு அறிவித்த பிறகே அறிவிக்கப்படும் என தெரிகிறது.