காந்திநகர்:

குஜராத் மாநில அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 2 ஆண்டுகளில்  15ஆயிரம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலமான  குஜராத்தில் கடந்த இரண்டு ஆண்டு களில் 71,774 குழந்தைகள் அரசு மருத்துவமனைகளில் பிறந்துள்ளதாகவும், 40,884 குழந்தைகள் தனியார் மருத்துவமனையில் பிறந்துள்ளதாகவும், இவர்களில் 15,013 குழந்தைகள் மரணித்து இருப்பதாகவும் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினரின் கேள்விக்கு பதில் அளித்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார். ஒரு நாளைக்கு சராசரியாக 20 குழந்தைகள் இறந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குஜராத்தில் மாநில சுகாதாரத் துறையினரின் தகவல்களின்படி, இறந்த குழந்தைகளில் பெரும்பாலானவை  எடை குறைவாக பிறந்த குழந்தைகள் என்றும், பல குழந்தைகளுக்கு சுவாச சிக்கல்கள், இரத்தச் சர்க்கரைக் குறைவு போன்ற காரணங்களால் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அகமதாபாத் மாவட்டத்திலேயே அதிக அளவிலான குழந்தைகள் இறப்பு பதிவாகி உள்ளதாகவும், இங்குள்ள அரசு மருத்துவமனைகளில்,  2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில், பிறந்த 12,637 குழந்தைகள் எஸ்.என்.சி.யுக்களில் அனுமதிக்கப்பட்டதாகவு இவர்களில் 4,322 பேர் சிகிச்சையின் போது இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வதோதரா மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் பிறந்த , 6,576 பிறந்த குழந்தைகளில்  2,362 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதேபோல், ராஜ்கோட்டில்  2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் 10,116 கைக்குழந்தைகள் பிறந்ததாகவும், இவர்களில்  1,758 இறப்புகள் பதிவாகி உள்ளதாகவும், சூரத்தில்  12,656 (அரசு மருத்துவமனைகளில் பிறந்த 9,667 மற்றும் 2,989 பரிந்துரை வழக்குகள்) குழந்தைகளில் 1,986 பேர் சிகிச்சையின் போது இறந்தனர் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த பட்டியல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில்,  மாநிலத்தில் குழந்தை இறப்புகளைக் கட்டுப்படுத்த மாநில பாஜக அரசு  தவறியதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் தோஷி கடுமையாக சாடியுள்ளார்.

“இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான குழந்தை இறப்புகளை நோக்கி மாநில அரசு கண்மூடித்தனமாக உள்ளது. இது எந்த தீர்வு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ”  ”குஜராத்தில் சுகாதார சேவைகளின் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. சூப்பர் ஸ்பெஷாலிட்டி சேவைகளில் 65 சதவீத காலியிடங்கள் உள்ளன. இதேபோல், முக்கிய நகரங்களில் 35 முதல் 45 சதவீதம் மருத்துவர் பதவிகள் காலியாக உள்ளன, மேலும் 60 சதவீத பாரா மருத்துவ பணியாளர்கள் பதவிகள் மாவட்ட மற்றும் சிவில் மருத்துவமனைகளில் காலியாக உள்ளன. மருந்துகளை வாங்குவதற்கும், கட்டுமான ஒப்பந்தங்களை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கும் மட்டுமே மாநில அரசு ஆர்வமாக உள்ளது என்று குற்றம் சாட்டி உள்ளார்.

பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் குழந்தைகள் இறப்பு அதிகரித்து வருவது மக்களிடையே கவலையை ஏற்படுத்த உள்ளது.  தங்களது சொந்த மாநிலத்தில் நடைபெற்றுள்ள இந்த அதிர்ச்சி  சம்பவம் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள்? என சமுக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள் நெட்டிசன்கள்…