இந்துக்கள் வீட்டை இஸ்லாமியர்கள் வாங்க தடை தேவை : பா ஜ க பெண் எம் எல் ஏ கோரிக்கை

சூரத்

ந்துக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் இஸ்லாமியர்கள் வீடு வாங்க தடை விதிக்க வேண்டும் என குஜராத் பெண் எம் எல் ஏ சங்கீதா பாடில் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

குஜராத்தில் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் மதத் தகராறு அடிக்கடி நடைபெறுகிறது.   அதனால் சில இடங்களில் வேற்று மதத்தவர் வீடுகள் வாங்க அரசு அனுமதி தேவை என அறிவிக்கப் பட்டுள்ளது..   அதாவது இந்துக்கள் அதிகம் உள்ள பகுதியில் இஸ்லாமியரோ,  அல்லது இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் இந்துக்களோ வீடு வாங்குவதற்கு அந்த மாவட்ட ஆட்சியாளரிடம் அனுமதி பெற வேண்டும்.  இந்நிலையில் சூரத் நகரின் லிம்பாயத் தொகுதியை சேர்ந்த பா ஜ க பெண் சட்டமன்ற உறுப்பினர் சங்கீதா பாட்டில் அரசுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.

அதில் அவர் கூறுவதாவது :

”குஜராத் மாநிலத்தில் இந்துக்கள் அதிகம் உள்ள பகுதியில் இஸ்லாமியரோ,  அல்லது இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் இந்துக்களோ வீடு வாங்குவதற்கு அந்த மாவட்ட ஆட்சியாளரிடம் அனுமதி பெற வேண்டும் என்னும் சட்டம் உள்ளது.   ஆனால் இஸ்லாமியர்கள் தவறான தகவல் கொடுத்து அனுமதி பெற்று விடுகின்றனர்.  சில வேளைகளில் இந்துக்களை மிரட்டி அந்த வீடுகளை வாங்கி விடுகின்றனர்.

எனது லிம்பாயத் தொகுதி முன்பு முழுக்க முழுக்க இந்துக்கள் மட்டுமே வாழும் பகுதியாக இருந்தது.  ஆனால் இங்கு இந்துக்களின் பெயரில் உள்ள பகுதிகளான கோவிந்த் நகர், பாரதி நகர், மதன்புரா மற்றும் பாவ்னா பார்க் ஆகிய இடங்களில் இப்போது இஸ்லாமியர்களே பெரும்பான்மையாக வசிக்கின்றனர்.   வீடுகளை விற்க மறுக்கும் இந்துக்களை மிரட்டி அல்லது பணத்தாசையைக் காட்டி இந்த வீடுகளை வாங்கி உள்ளனர்.  அதனால் இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில்  குறிப்பாக லிம்பாயத் பகுதியில் இஸ்லாமியர்கள் வீடுகளை வாங்க முழுமையாக தடை விதிக்க வேண்டும்.” என கோரிக்கை விடுத்துள்ளார்.