டெல்லி: பாஜகவில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் எம்பியான மன்சுக் வாசவா அறிவித்துள்ளார்.

பருச் மக்களவை தொகுதியின் பாஜக எம்பியாகவும், பழங்குடியின தலைவராகவும் இருப்பவர் மன்சுக்பாய் வாசவா. திடீரென தாம் சார்ந்த பாஜகவில் இருந்து விலகுவதாக குஜராத் மாநில பாஜக தலைவர் சி.ஆர். பாட்டீலுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறி உள்ளதாவது: எனக்கு கொடுக்க வேண்டியது அனைத்தையும் பாஜக கொடுத்துவிட்டது. அதற்காக கட்சிக்கும், கட்சியின் தலைவர்களுக்கும் நன்றி கூறுகிறேன். எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு கட்சிக்கு விசுவாசமாக இருந்தேன்.

அதே நேரத்தில், கட்சி, வாழ்க்கை இரண்டிலும் கொள்கையை பின்பற்றுவதில் அதீத கவனம் தேவை. இறுதியில் நானும் ஒரு மனிதன் என்பதை உணர்கிறேன். தவறுகள் நடக்கின்றன. அதனால் தான் நான் கட்சியில் இருந்து விலகுகிறேன். பட்ஜெட் கூட்டத்தொடரின் போது சபாநாயகரை சந்தித்து நான் ராஜினாமா செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.