குஜராத்: பாலியல் புகாரில் சிக்கிய பாஜக துணைத் தலைவர் ராஜினாமா

காந்திநகர்:

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய குஜராத் பாஜக துணைத் தலைவர் ராஜினாமா செய்துள்ளார்.

குஜராத் மாநிலம் கட்சு மாவட்டத்தை சேர்ந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயந்தி பானுசாலி (வயது 53). பாஜக மாநில துணைத் தலைவர். இவர் தனது தன்னுடைய ராஜினாமா கடிதத்தை மாநில பா.ஜ.க தலைவர் ஜிது வாகானிக்கு அனுப்பியுள்ளார்.

அவருடைய ராஜினாமா ஏற்கப்பட்டதாக பாஜக அறிவித்துள்ளது. இவர் 2007ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை அப்தாசா சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தார்.

சூரத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் கடந்த 10-ம் தேதி போலீஸ் கமிஷனரிடம் பானுசாலிக்கு எதிராக பாலியல் பலாத்கார புகாரை அளித்தார்.

‘‘பேஷன் டிசைன் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக ஏமாற்றி கடந்த நவம்பரில் பல முறை பாலியல் பலாத்காரம் செய்தார். மிரட்டுவதற்கு அவருடைய உதவியாளர்களில் ஒருவர் செல்போனில் இதை படம் எடுத்து உள்ளார்’’ என பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்திருந்தார்.

இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள பானுசாலி தற்போது ராஜினாமா செய்துள்ளார். இவர் மீது இன்னும் வழக்குப் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.