வங்கி கடன் மோசடியில் ஈடுபட்ட குஜராத் தொழிலதிபர் நைஜீரியாவுக்கு ஓட்டம்

டில்லி:

குஜராத்தில் மருந்து நிறுவனம் நடத்தி வந்தவர் நிதின் சந்தேசரா. இவர் ஆந்திரா வங்கியில் ரூ.5 ஆயிரம் கோடி கடன் வாங்கினார்.

ஆனால் அதை திருப்பி செலுத்தாமல் தலைமறைவானார். அமலாக்க பிரிவு வழக்குப் பதிவு செய்து ஆந்திரா வங்கியின் முன்னாள் இயக்குனர் அனுப் கார்க், மருந்து நிறுவன இயக்குனர்கள், ஆடிட்டர் உள்ளிட்ட சிலரை கைது செய்தது. இந்நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.4 ஆயிரத்து 700 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்க பிரிவு கடந்த ஜூன் மாதத்தில் முடக்கியது.

தலைமறைவாக இருந்த நிதின் சந்தேசராவுக்கு பிடி வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. சிபிஐ.யும் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வந்தது. நிதின் சந்தேசரா துபாயில் வைத்து கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. அவரை இந்தியாவுக்கு அழைத்து வர அமலாக்க பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் என்றும் செய்திகள் வெளியானது.

ஆனால், நிதின் சந்தேசரா துபாயில் இருந்து குடும்பத்தினருடன் நைஜீரியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக அமலாக்க துறை அதிகாரிகள் தற்போது தெரிவித்துள்ளனர். நைஜீரியாவுடன் கைதிகள் ஒப்படைப்பு ஒப்பந்தமோ பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தமோ இல்லாததால் அங்கிருந்து அவரை இந்தியா அழைத்து வருவது சிக்கலாகியுள்ளது.