டெல்லி: குஜராத்தில் நடைபெற்ற 6 தொகுதிகளின் இடைத்தேர்தலில் காங்கிரஸ் 3ல் வென்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நாடு முழுவதும் மொத்தம் 51 சட்டசபை தொகுதிகள், 2 லோக்சபா தொகுதிகளில் கடந்த 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. 17 மாநிலங்களில் இடைத் தேர்தல் நடந்தது. இந்த தேர்தல் நடைபெறும் 51 தொகுதிகளில் 30 தொகுதிகள் பாஜக வசமும், 11 தொகுதிகள் காங்கிரசிடமும், மற்ற தொகுதிகள் மாநில கட்சிகளிடம் உள்ளன.

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மற்ற மாநில இடைத்தேர்தல் முடிவுகளை விட, குஜராத் இடைத்தேர்தல் முடிவுகள் தான் உன்னிப்பாக பார்க்கப்பட்டன. அதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை.

குஜராத்தில் பயாத் மற்றும் ராதான்புர் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்த 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த வெற்றி அந்த கட்சிக்கும், தொண்டர்களுக்கும் புத்துணர்ச்சியை அளித்திருக்கிறது என்றே சொல்லலாம்.

அதற்கு காரணம், 2019ம் ஆண்டில் குஜராத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைமை அந்தோ பரிதாபகரம்தான். சரியாக, லோக்சபா தேர்தலுக்கு முன்பாக காங்கிரசின் 4 எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை துறந்து, பாஜகவுக்கு தாவினர். அந்த தொகுதிகளுக்கான தேர்தல், 2019 லோக்சபா தேர்தலுடன் நடந்தது. பாஜக அங்கு வென்றது.

தற்போதைய இடைத்தேர்தலில், 6 தொகுதிகளில் 3ஐ காங்கிரஸ் வென்றிருக்கிறது. அதில் 2 தொகுதிகள் ராதான்புர் மற்றும் பயாத். இந்த தொகுதிகளில் இருந்த பாஜக முக்கிய தலைவர்கள் அல்பேஸ் தாக்கூர், தவால்சிங் ஜலா ஆகியோர் தோற்றனர்.

தாக்கூர், காங்.வேட்பாளர் ரகு தேசாயிடம் 3,814 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்ந்தார். அதேபோன்று, பாஜக வேட்பாளர் ஜலா, தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் சிவா படேலிடம் தோற்றார்.

இந்த வெற்றி பெரிய கொண்டாட்டமாக இல்லை என்றாலும், 2022ம் ஆண்டு வரக் கூடிய சட்டசபை தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக அமையக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

டெல்லி தலைமையில் குழப்பங்கள் நீடித்த நிலையில், இங்கு மட்டும் எப்படி கிடைத்தது என்று அரசியல் நோக்கர்கள் சில புள்ளி விவரங்களை கூறுகின்றனர். அக்டோபர் 2ம் தேதி காங்கிரஸ் தரப்பில் நடத்தப்பட்ட பிரச்சார கூட்டங்கள் தான்.

தண்டி முதல் போர்பந்தர் வரை நடத்திய பிரச்சாரத்தில் மொத்தம் 20 நகரங்களில் அவர்கள் தீவிர பிரச்சாரம் செய்தனர். வீடு, வீடாக பிரச்சாரம், வேலைவாய்ப்பின்மை, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து பிரச்சாரம் செய்து வெற்றி கண்டிருக்கின்றனர்.

இதுகுறித்து குஜராத் காங்கிரஸ் கமிட்டி தலைவர் அமித் சாவ்தா, கூறி இருப்பதாவது: இரவு, பகலாக உழைத்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு கிடைத்த வெற்றி இது. எங்கள் கட்சியின் எம்எல்ஏக்களை விலை கொடுத்து வாங்க பாஜக முயற்சித்தது.