ஸ்ரீ துவாரகாதீசர் கோயில்.

ஸ்ரீ துவாரகாதீசர் கோயில்.
ஸ்ரீ கல்யாண நாச்சியார் { ஸ்ரீ லெஷ்மி, ஸ்ரீ ருக்மணி, ஸ்ரீ அஷ்டமஹிஷிகள் } ஸமேத ஸ்ரீ த்வாரகாநாதப் பெருமாள், {ஸ்ரீ த்வாராகாதீசர், ஸ்ரீ கல்யாண நாராயணர் } திருக்கோவில், துவாரகாதீசர் திவ்யதேசம், தேவ பூமி த்வாரகை மாவட்டம், குஜராத் மாநிலம்.
பக்த மீரா மேவாரிலிருந்து பாலைவனத்தில் நடந்துவந்து கண்ணனுடன் இரண்டறக் கலந்தது இந்த தலத்திலேயே ஆகும்.
த்வாரகாதீசர் கோயில் என்பது 108 வைஷ்ணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.
இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள தேவபூமி துவாரகை மாவட்டத்தில் அமைந்த இத்தலம் பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், ஆண்டாள் ஆகிய 5 ஆழ்வார்களால் 13 பாக்களால் பாடல் பெற்றதாகும்.
இந்த ஸ்தலம் குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிரா கடலோரம், துவாரகை நகரில் அமைந்துள்ள ஒகா துறைமுகத்திற்கு அருகில் ஓடக்கூடிய கோமதி என்னும் புண்ணிய நதிக்கரையில் அமைந்துள்ளது.
ஸ்தல வரலாறு
தற்போதுள்ள ஆலயம் 1500 ஆண்டுகட்கு முன் கட்டப்பட்டதாகும்.
உண்மையான துவாரகை கடலுள் மூழ்கிவிட்டது.
கிருஷ்ணனின் பேரனான வஜ்ரநாபி என்பவனால் கி. மு 400 இல் கட்டப்பட்டதாகக் கூறும் இந்தக்கோவிலை இங்குள்ள மக்கள் துவாரகா நாத்ஜி ஆலயம் என்றே அழைக்கிறார்கள்.
இப்போதுள்ள கோவிலும் நான்காவது முறையாக 16 ஆம் நூற்றாண்டில் மேலை சாளுக்ய பாணியில் கட்டப்பட்டதாகும்.
கடந்த 5000 ஆண்டுகளாக அவ்வப்போது ஏற்பட்ட கடல் கோளாலும் பிற இன்னல்களாலும் இத்தலம் பாதிக்கப்பட்ட போதெல்லாம் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள அமைப்பு சுமார் 1500 ஆண்டுகட்கு முன்பு புதுப்பிக்கப்பட்ட அமைப்பாகும்.
கண்ணனின் வரலாற்றோடு தொடர்புடைய இந்நகரம் கண்னனால் நிர்மாணிக்கப்பட்டு இருந்து இறுதி வரை அரசாண்ட இடமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எம்பெருமான், தாயார் :-
இத்தலத்தின் எம்பெருமான் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் த்வாரகா நாதன், த்வாராகாதீசன், கல்யாண நாராயணன் என்ற பெயர்களுடன் அருள் பாலிக்கிறார்.
தாயார் கல்யாண நாச்சியார் (லக்ஷமி) ருக்மணி, அஷ்டமஹிஷிகள் (எட்டு பட்டத்தரசிகள்).
இத்தலத் தீர்த்தம் கோமதி நதி.
விமானம் ஹேம கூட விமானம் எனும் அமைப்பைச் சேர்ந்தது.
ஸ்தல சிறப்புகள் :-
இத்தலம் உலக பாரம்பர்ய களமாக அறிவிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஜகத் மந்திர் எனப்படும் த்வாரகைக் கண்ணன் கோவில் மிகப்பெரிய அரண்மனை போன்று அமைந்துள்ளது.
இங்கு அவனது பட்டத்தரசிகளுக்கும் அண்ணன் பலராமனுக்கும் குரு துர்வாசருக்கும் தனித்தனியே சன்னதிகள் உண்டு.
கண்ணனுக்கு உணவும் உடையும் ஓயாமல் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
ஒரு நாளைக்கு 17 முறை உணவு கொடுத்து மணிக்கொருதரம் உடைமாற்றுகிறார்கள்.
காலையில் இங்கு நடைபெறும் திருப்பள்ளியெழுச்சியை “உடாபன்” என்றழைக்கிறார்கள்.
அப்போது தங்க பல்குச்சியால் பல்விளக்கி லட்டும், ஜிலேபியும் தருகிறார்கள்.
7 1/2 மணிக்குள் தீர்த்தமும் ப்ரசாதமும் படைக்கப்படுகிறது.
உண்ட களைப்பு மாறுவதற்குள் மீண்டும் 8 மணிக்கெல்லாம் சக்கரை, பால், தயிர் போன்றன பரிமாறுகிறார்கள்.
பிறகு அப்பமும், அக்காரமும் பாலில் கலந்து அமுதும் சிற்றுண்டியும் தரப்படுகிறது.
அதன்பிறகு கனி வர்க்கங்கள் தரப்படுகின்றன.
பிறகு செரிமானத்திற்காக லேகியம் தருகிறார்கள். இதன்பின் கண்ணன் உறக்கம் கொள்கிறான்.
இவ்விதம் கண்ணனுக்கு உணவு கொடுக்கும் இந்த முறைக்கு போக் என்று பெயர்.
துர்வாசரின் கோபத்திற்கு ஆளாகி அரண்மனையிலிருந்து வெளியேறி ருக்மணி சில காலம் இந்த இடத்தில் தனித்து வாழ்ந்ததால் ருக்மணி தேவிக்கு ஊருக்கு வெளியே தனியாக கோவில் உள்ளது.
சூர்யன், சந்த்ரன் பொறிக்கப்பட்ட இக்கோவிலின் கொடி ஒருநாளில் ஐந்து முறை ஏற்றப்படுகிறது.