ஊழியர்களுக்கு திபாவளி பரிசாக 600 கார்கள் தரும் குஜராத் வைர வியாபாரி

சூரத்

குஜராத் மாநில வைர வியாபாரி சாவ்ஜி தோலகியா தனது ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக 600 கார்கள் வழங்க உள்ளார்.

உலகின் மிகப்பெரிய வைர வியாபாரிகளில் ஒருவர் குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த சாவ்ஜி தோலகியா. இவருக்கு சொந்தமான ஹரிகிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் இவர் வைரக் கற்களை வெட்டி மெருகேற்றி விற்று வருகிறார்.  இவருடைய நிறுவனத்தில் ஏராளமானோர் பணி புரிந்து வருகின்றனர்.

இவர் ஒவ்வொரு வருடமும் தனது ஊழியர்களில் நேர்மையானவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தீபாவளியின் போது பல விலை உயர்ந்த பரிசுகளை வழங்கி வருகிறார். இந்த திட்டம் கடந்த 2011 ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்டது. இவர் கடந்த 2014 ஆம் வருடம் 500 பேருக்கு அடுக்கு மாடி குடியிருப்புக்களும் 525 பேருக்கு வைர நகைகளும் பரிசளித்துள்ளார்.

சாவ்ஜி தோலகியா இது குறித்து, “வருடா வருடம் என் ஊழியர்களுக்கு மன்னிக்கவும் எனது குழந்தைகளுக்கு தீபாவளி பரிசாக விலை உயர்ந்த பொருட்கள் அளித்து வருகிறேன். இந்த வருடம் 1500 ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் 600 பேர் கார்களை விரும்பினார்கள். மீதமுள்ளவர்கள் விருப்பப்படி அந்த பணத்தை வங்கி வைப்பு நிதியாக அளித்துள்ளேன்.

கார்களின் சாவிகளை டில்லியில் பிரதமர் மோடி கையால் வழங்க உள்ளார். அவர் அத்துடன் வங்கி சான்றிதழ்களையும் வழங்க உள்ளார். அதன்படி டில்லியில் அவரை பரிசு பெறுபவர்களில் 4 பேர் சந்தித்து நேரில் பரிசு பெறுவார்கள். அதில் நான் பெறாத ஒரு மாற்றுத் திறனாளி மகளும் இருப்பது எனக்கு பெருமை அளிக்கிறது.” என தெரிவித்துள்ளார்.

சாவ்ஜி குறிப்பிட்ட அந்த மாற்றுத் திறனாளி ஊழியரான காஜல் சோரதியா என்னும் 22 வயது இளம்பெண், “நான் பிரதமரை நேரில் சந்தித்து அவர் கையால் காரின் சாவியை பெறுவதில் உற்சாகம் அடைந்துள்ளேன். நான் பிரதமரிடம் இருந்து கார் சாவியை வாங்க உள்ளது என் சக ஊழியர்களுக்கு தெரியாது. பிரதமர் என் சக ஊழியர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரை நிகழ்த்த உள்ளார். அப்போது தான் இது குறித்து அவர்களுக்கு தெரிய வரும்” என தெரிவித்துள்ளார்.