அகமதாபாத்,

குஜராத்தில் முதல் கட்ட தேர்தல் கடந்த 9ந்தேதி  நடந்து முடிந்துள்ளது. இரண்டாவது கட்ட தேர்தல் வரும் 14ந்தேதி நடைபெற உள்ளது.

இதையடுத்து, அங்கு தேர்தல் பிரசாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர்  வீதிகளில் பிரசாரம் செய்யவோ, பேரணி நடத்தவோ தேர்தல் ஆணையம் அதிரடியாக தடை வித்துள்ளது.

சட்டம் – ஒழுங்கை கருத்தில் கொண்டு இருவரும் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அகமதாபாத் போலீஸ் கூறி உள்ளது.

182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக்கொண்ட குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து வருகிறது. முதற்கட்டமாக, கடந்த 9-ம் தேதி 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான அரசியல் கட்சிகளிள் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.

பிரதமர் மோடி அறிவித்த ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு காரணமாக குஜராத்தில் வணிகர்கள் பெரும்பாலோனோர் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதன் காரணமாக குஜராத்தில் பாஜக செல்வாக்கு சரிந்துள்ளது.

இந்நிலையில், ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக பகீர பிரயத்தனம் செய்து வருகிறது. காங்கிரசுக்கு குஜராத்தின் மக்கள் பெரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதன் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கக்கூடும் என கருத்துக்கணிப்புகளும் தெரிவித்து வருகின்றன.

காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவரான ராகுல்காந்தியின் பிரசாரத்துக்கு குஜராத்தில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அவரது பேச்சைக்கேட்க ஆயிரக்கணக்கான இளைஞர், இளைஞி களும் குவிந்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சிக்கு பெருகி வரும் ஆதரவை கண்டு அச்சமுற்ற பிரதமர் மோடி தொடர்ந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அதைத்தொடர்ந்து, அகமதாபாத் நகரில் பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேரணி செல்லத் திட்டமிட்டிருந்தனர். இரு கட்சி சார்பிலும் ஒரே நாளில் பேரணிக்கு அனுமதி கோரப்பட்டது.

இரு கட்சியினரும் பேரணிக்கு அனுமதி கேட்டிருப்பதால், இதன் காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு  இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, இரு கட்சியினரும் பேரணி நடத்தவோ, வீதி வீதியாவோ செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குஜராத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

பாஜக சார்பில் நடத்த இருந்த பேரணியில் மோடியும், காங்கிரஸ் பேரணியில் ராகுல்காந்தியும் பங்குபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.