குஜராத்: முஸ்லிம்கள் மீது அச்சத்தை ஏற்படுத்தும் வீடியோ உலா…தடுத்து நிறுத்த வலியுறுத்தல்

காந்திநகர்:

குஜராத் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடக்கிறது. ஆளும் பாஜக மற்றும் எதிர்கட்சியான காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் பாஜக சார்பில் ஒரு வீடியோ காட்சி அடங்கிய பிரச்சாரம் ஒன்று ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இது சமூக வலை தளங்களிலும் பரவுகிறது. இந்த வீடியோவில்…

இளம்பெண் ஒருவர் சாலையில் தனியாக நடந்து செல்கிறார். அப்போது இரவு 7 மணி. அந்த பெண்ணின் பின்னணியில் மசூதியில் இருந்து ஒலிபரப்பாகும் தொழுகைக்கான அழைப்பு வருகிறது. இதை கண்டு அந்த பெண் அச்சத்துடன் வேகமாக நடக்கும் காட்சி அதில் இடம்பெற்றுள்ளது.

அதே மற்றொரு காட்சியில் அந்த பெண்ணின் வீட்டில் அவரது பெற்றோர் பதற்றத்துடன் காத்திருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. அவர்களது பின்னணியில் கிருஷ்ணர் கடவுள் உருவம் தெரிகிறது. சிறிது நேரத்தில் வீட்டு காலிங் பெல் ஒலிக்கிறது. கதவை திறந்து பார்த்ததும் அந்த இளம்பெண் நிற்கிறார்.
உடனே அந்த பெண்ணை பெற்றோர் கட்டித் தழுவி தலையில் முத்தமிடுகின்றனர். இதன் பின்னர் அந்த தாய் பேசுவது போன்ற காட்சி இடம்பெறுகிறது. அதில் 22 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலை தான் இரு ந்தது. அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இது தொடரும் என்று பேசுகிறார்.

அப்போது அந்த இளம்பெண் கவலை அடைய வேண்டாம். யாரும் இங்கு வர முடியாது. இதற்கு காரணம் மோடி இங்கே இருக்கிறார் என்று அந்த இளம்பெண் பேசுவதுபோல் வீடியோ பிரச்சாரம் முடிவடைகிறது. இ ந்த வீடியோ காட்சியை பற்றி யாரும் கவலை அடையவில்லை.
எனினும் மனித உரிமை வக்கீலான கோவிந்த் பார்மர் என்பவர் இது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அதோடு அகமதாபாத் சிசிபி போலீசிலும் புகார் அளித்துள்ளார். இந்த வீடியோ ஒளிபரப்பை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும்.

இது தேர்தல் பணிகளை பாதிக்கும். முஸ்லிம்களுக்கு எதிரான கண்ணோட்டத்தை உருவாக்கும். பெரும்பான்மையான மக்கள் மத்தியில் முஸ்லிம் என்றால் ஒரு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இது உள்ளது. இது ஓட்டுக்களை பிரிக்கும் தந்திரமாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் ஐடி பிரிவு தலைவர் ரோகன் குப்தா கூறுகையில், ‘‘எந்த வீடியோவிலும் நாங்கள் எந்த கட்சி பெயர்களையும் பயன்படுத்துவது கிடையாது. ஆனால், இது போன்ற மோசமான பிரச்சாரங்களை பாஜக மேற்கொண்டு பயனடைந்து வருகிறது’’ என்றார்.

பாஜக மீடியா பிரிவு நிர்வாகி பங்கஜ் சுக்லா கூறுகையில், ‘‘இந்த வீடியோவுக்கும் எங்களுக்கு எந்த தொடர்பும் கிடையாது. இதை யார் தயார் செய்தார்கள் என்பது தெரியவில்லை. நாங்கள் இதை செய்யவில்லை. பாஜக நல விரும்பிகள் அதிகம் உள்ளனர். அவர்களில் எவரேனும் இந்த வீடியோவை தயாரித்து அவர்களது உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கலாம்’’ என்றார்.