மகாபாரத போரை போன்றது குஜராத் தேர்தல்! ராகுல் காந்தி பேச்சு

வல்சாத் :

ட்டமன்ற தேர்தலையொட்டி குஜராத்தில் தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள ஆளும் பாரதியஜனதா அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு டிசம்பர் 9 மற்றும் 14-ம் தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்றுதேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

குஜராத்தில் ஆட்சியை பிடிக்கும் நோக்கில் காங்கிரசும் மும்முரமாக களத்தில் இறங்கி செயல்பட்டு வருகிறது. இதையடுத்து அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி குஜராத்தில் முகாமிட்டு தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அங்கு தொடர்ந்து பேரணிகளை நடத்தி ஆதரவு திரட்டி வரும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி நேற்று வல்சாத் மாவட்டத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

அங்குள்ள பிரசித்த பெற்ற  கோசங்கா  கிருஷ்ணர் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், பின்னர் பார்டி நகரில் திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,

மகாபாரத போருக்கு முன் துரியோதனனும், அர்ஜுனனும் கிருஷ்ணரை சந்தித்தனர். அப்போது வெறும் 5 கிராமங்களை மட்டும் பாண்டவர்களுக்கு கொடுக்குமாறு துரியோதனனை கிருஷ்ணர் கேட்டுக்கொண்டார். ஆனால் அதற்கு மறுத்ததால் மகாபாரத போர் மூண்டது.

குஜராத் தேர்தலும் மகாபாரத போரை போன்றது. இது உண்மைக்கும், பொய்மைக்கும் இடையிலான மோதல். கவுரவர்கள் மிகப்பெரிய படைபலம் மற்றும் ஆயுதங்களை கொண்டிருந்தனர். ஆனால் பாண்டவர்கள் பக்கம் உண்மை இருந்தது. அதைத்தவிர வேறு எதுவும் இல்லை. அதைப்போலவே எங்களிடமும் உண்மையைத்தவிர வேறேதும் இல்லை. இந்த தேர்தலில் வாய்மையே வெல்லும் என்றார்.

மேலும், குஜராத்தில் பாஜக ஆட்சியில்  வேலையில்லா திண்டாட்டம் பெருகி உள்ளது என்றும்,  விவசாயிகளின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை,  தனியாரின் வசம் இருப்பதால் கல்வி மற்றும் மருத்துவத்திற்கு மக்கள் அதிக அளவு பணம்  செலவழிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

ஊழல் மற்றும் நீர், நிலம் சுரண்டல் போன்றவையே குஜராத்தின் உண்மை நிலவரம் என்பதையும் சுட்டிக்காட்டி பேசினார்.

மேலும், தன்னை ஒரு காவலாளி என பிரதமர் மோடி எப்போதும் கூறி வருகிறார். ஆனால், அவர் உண்மையான காவலாளி என்றால், ஜெய்ஷாவின் நிறுவனத்தின் வருவாய் அதிகரிப்பு குறித்து விசாரணை நடத்துங்கள். அப்படி செய்யாவிட்டால் நீங்கள் காவலாளி அல்ல, பங்காளி ஆகும்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.