குஜராத் மாநிலத்திலும் குறைகிறது கொரோனா பிசிஆர் பரிசோதனை கட்டணங்கள்!

காந்திநகர்: குஜராத்தில் கொரோனா  பிசிஆர் கட்டணங்கள் அதிரடியாக குறைக்கப்பட்டு உள்ளன.

டெல்லி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து குஜராத் மாநிலத்திலும் கொரோனா தொற்றைக் கண்டறிவதற்கான பிசிஆர் பரிசோதனை கட்டணங்களை குஜராத் அரசும் அதிரடியாக குறைத்துள்ளது.

இதுதொடர்பாக துணை முதல்வர் நிதின் படேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வர் விஜய் ரூபானி தலைமையில் நடைபெற்ற முக்கியக் குழு கூட்டத்தைத் தொடர்ந்து, குஜராத்தில் தனியார் ஆய்வகங்களில் கொரோனாவை கண்டறியும் பிசிஆர் பரிசோதனை கட்டணங்களை குறைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது குஜராத்தில் பிசிஆர் பரிசோதனைக்கு ரூ.1500 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது, அரசு உத்தரவுப்படி கட்டணம் ரூ.800 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் இந்த சோதனை இலவசமாகவே செய்யப்படுகிறது.

இந்த சோதனைகளை வீட்டில் செய்து கொள்ள விரும்புபவர்களுக்கு ரூ.1100 கட்டணமாக வசூலிக்கப்படும் என்றார்.