குஜராத் கலவரத்தில் மெத்தனம் காட்டிய மாநில அரசு : முன்னாள் ராணுவ அதிகாரி

டில்லி

குஜராத் கலவரத்தை கட்டுப்படுத்த கடந்த 2002ஆம் வருடம் குஜராத் சென்ற போது மாநில அரசு மிகவும் மெத்தனமாக இருந்ததாக முன்னாள் ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடந்த 2002 ஆம் ஆண்டு கோத்ரா ரெயில் பெட்டி எரிப்பை தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் கடும் கலவரம் ஏற்பட்டு பலர் மரணம் அடைந்தனர். இந்த கலைவரத்தை அப்போதைய முதல்வர் மோடி தலைமையிலான அரசு சரியாக கட்டுப்படுத்தவில்லை எனவும் கலவரக்காரர்களுக்கு ஒரு சில பாஜகவினர் உதவி செய்ததாகவும் புகார்கள் எழுந்தன. இந்த கலவரத்தை கட்டுப்படுத்த அப்போதைய ராணுவ அதிகாரி சமீர் உதின் ஷா தலைமையில் ராணுவத்தினர் சென்றனர்.

இந்த கலவரம் குறித்து சமீர் தி சர்க்காரி முசல்மான் என்னும் ஒரு புத்தகத்தை எழுதி உள்ளார். அந்த புத்தகத்தில் அவர் இந்த கலவர நேரத்தில் நிகழ்ந்தவைகள் குறித்து விவரித்துள்ளார். அந்த புத்தகத்தில், “நான் கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரத்தை கட்டுப்படுத்த 3000 ராணுவத்தினருடன் சென்றிருந்தேன். நாங்கள் மார்ச் மாதம் 1 ஆம் தேதி குஜராத் மாநிலம் சென்றோம். ஆனால் 2 ஆம் தேதி வரை ராணுவத்தினரால் கலவரத்தை கட்டுப்படுத்த அனுமதி அளிக்கப்படவில்லை.

நான் விமான நிலையத்தில் வந்து இறங்கியதுமே போக்குவரத்து வசதிகள் குறித்து கேட்டதற்கு மாநில அரசு அதிகாரிகள் சரியாக பதில் அளிக்கவில்லை. அரசு நிர்வாகமே மெத்தனமாக இருந்ததாக எனக்கு தோன்றியது நான் உடனடியாக அப்போதைய முதல்வர் மோடியின் இல்லத்துக்கு என்னை அழைத்துச் செல்லவேண்டும் என கூறினேன். மோடியின் இல்லத்தில் அவருடன் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் இருந்தார்.

நான் மோடியிடம் எங்களுக்கு தேவையான போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து தேவைகள் பற்றியும் மோடியிடம் தெரிவித்து விட்டு வந்தேன். ஆனால் அடுத்ஹ நாள் நான் அங்கு சென்ற போது போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை. கடுமையான காத்திருப்புக்கு பின் எங்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டன.

நாங்கள் கலவரம் நடந்த இடங்களுக்கு சென்ற போது காவல்துறையினரின் செய்கைகளைக் கண்டு அதிர்ந்து போனோம். சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளில் சூழ்ந்துக் கொண்ட கலவரக்காரர்களை விரட்ட காவல்துறையினர் எவ்வித முயற்சியும் செய்யவில்லை. இது அரசின் பிரித்தாளும் மனப்பான்மையை காட்டுவதாகவே எனக்கு தோன்றியது.” என சமிர் குறிப்பிட்டுள்ளார்.