குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி இடமாற்றம் : எதிர்க்கும் வழக்கறிஞர் சங்கம்

கமதாபாத்

குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி அகில் குரேஷி மும்பை நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்படுவதை வழக்கறிஞர் சங்கம் எதிர்த்துள்ளது.

குஜராத் மாநில உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளில் ஒருவர் அகில் குரேஷி. இவர் தற்போதைய குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷ் ரெட்டிக்கு அடுத்தபடியாக உள்ளார். உச்சநீதிமன்ற கொலிஜியம் சமீபத்தில் அகில் குரேஷியை மும்பை உயர்நீதிமன்றத்துக்கு இட மாற்றம் செய்ய பரிந்துரைத்தது. மும்பை உயர்நீதிமன்றத்தின் நீதி நிர்வாக மேம்பாட்டுக்காக அவரை இட மாற்றம் செய்ய பரிந்துரைத்ததாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு குஜராத் உயர்நீதிமன்ற பார் அசோசியேஷன் என்னும் வழக்கறிஞர் சங்கம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேற்று இது குறித்து ஒரு கூட்டத்தை கூட்டிய சங்கத்தில் இந்த இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் இயற்றப்பட்டது. மேலும் இது குறித்து வழக்கு மனு அளிக்கவும் அத்துடன் தொடர் வேலை நிறுத்தம் செய்யவும் முடிவு செய்யபப்ட்டது.

இது குறித்து வழக்கறிஞர் சங்க தலைவர் யதின் ஓசா, “நீதிபதி அகில் குரேஷியின் நீதி நிர்வாக மேம்பாட்டுக்காக இட மாற்றம் செய்யப்படுவதாக அளிக்கப்பட்ட காரணம் ஏற்கும்படியாக இல்லை. தற்போது மூத்த நீதிபதிகளில் இரண்டாம் இடத்தில் உள்ள குரேஷி மும்பையில் ஐந்தாம் இடத்தை அடைவார். அவ்வாறு இருக்கையில் அவரை இவ்வாறு இடம் மாற்றுவது தவறான செயலாகும்.” என தெரிவித்துள்ளார்.