காந்திநகர்.

குற்றம் சாட்டப்பட்டவரிடம் இருந்து கைப்பற்றப் பட்ட பழைய நோட்டுக்களை,  புது நோட்டாக மாற்றித் தரவேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு குஜராத் உயர்நீதிமன்றம் ஒரு வழக்கில், உத்தரவிட்டுள்ளது.

கல்பேஷ் படேல் என்பவர் ஆள்கடத்தல் வழக்கில் பணமதிப்பு குறைப்புக்கு முன் கைது செய்யப்பட்டர். அவரிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளும், ரூ 2.5 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களும் கைப்பற்றப் பட்டது.  அதற்குப் பிறகு அரசு அறிவிப்பின்படி அந்த நோட்டுகள் செல்லாதவை ஆகிவிட்டன.

படேல், தனக்கு பணத்தை திருப்பித் தரும்போது புதிய நோட்டுக்களாக தரவேண்டும் என இந்த வருடம் ஜனவரி மாதம் பானஸ்கந்தா மாவட்ட நீதிமன்றத்தில் ஓரு மனு தாக்கல் செய்தார்.  அந்த மனுவை விசாரித்த நீதிபதி அந்த பழைய நோட்டுக்களுக்குப் பதிலாக புதிய நோட்டுக்களைத் தர மார்ச் மாதம் 8ஆம் தேதி போலிசாருக்கு உத்தரவிட்டார்.  ஆனால் போலிசார் ரிசர்வ் வங்கியை மார்ச் மாதம் 24ஆம் தேதி அணுகிய போது,  மத்திய அரசு விதித்திருந்த காலக்கெடு முடிந்துவிட்ட படியால் மாற்ற முடியாது என வங்கி தெரிவித்தது.

படேல் மீண்டும் நீதிமன்றத்தை அணுகினார்.  கீழ்க்கோர்ட்டில் தாமதம் ஆவதால் அவர் உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  அதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றம் நோட்டுகளை உடனே மாற்றித் தரவேண்டும் என ரிசர்வ் வங்கிக்கு ஆணை பிறப்பித்துள்ளது.