ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வெற்றிபெற்றது.

 

கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கிய போட்டியில் டாஸ் ஜெயித்த குஜராத் கேப்டன் சுரேஷ் ரெய்னா முதலில் பந்து வீச்சைத் தேர்வுசெய்தார். இதையடுத்து கவுதம் கம்பீரும், சுனில் நரேனும் கொல்கத்தாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். சுழல் மன்னன் சுனில் பேட்டிங்கிலும் சுற்றிச் சுழன்றார். பிரவீன்குமார் வீசிய முதல் ஓவரிலேயே மூன்று பவுண்டரிகளை விளாசிய சுனில், பால்க்னெரின் அடுத்த ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசி, ரசிகர்களை குஷிபடுத்தினார். 4-வது ஓவரை சுரேஷ் ரெய்னா வீச, சுனில் கேட்ச் ஆனார். அவர் 42 ரன்கள் (17 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தார். அடுத்து ராபின் உத்தப்பா வந்தார். கேப்டன் கவுதம் கம்பீர் 33 ரன்கள் (28 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்து பெவிலியன் திரும்ப, உத்தப்பாவுடன், மனிஷ் பாண்டே இணைந்தார். உத்தப்பா 72 ரன்கள் (48 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஆட்டம் இழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது.

 

பின்னர் குஜராத் அணி விளையாடியது. ஆரோன் பிஞ்ச் 31 ரன் (15 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) பிரன்டன் மெக்கல்லம் 33 ரன் (17 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்து ஆவுட் ஆகினர். அடுத்து ரெய்னா களமிறங்கி ரன் மழை பொழிந்தார். அவர் 46 பந்துகளில் 4 சிக்சர், 9 பவுண்டரிகளை விளாசி, 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த வந்தவர்களில் ஜடேஜா மட்டுமே 19 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களில் திருப்திப்பட்டு நடையை கட்டினர். இருந்தாலும் 18.2 ஓவர்களில் 188 ரன்கள் எடுத்து குஜராத் அணி வெற்றிப்பெற்றது. குஜராத் கேப்டன் சுரேஷ் ரெய்னா ஆட்டநாயகன் விருது பெற்றார்

 

Gujarat Lions beat Kolkata Knight Riders by four wickets