ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி கூறும் குற்றச்சாட்டுக்கு குஜராத் அரசு செவி சாய்க்க வேண்டும்….உச்சநீதிமன்றம்

டில்லி:

ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி தெரிவிக்கும் புகாருக்கு குஜராத் அரசு செவி சாய்க்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

1996ம் ஆண்டு குஜராத் மாநிலம் பனாஸ்கந்தா காவல் நிலைய எல்லையில் வக்கீல் ஒருவர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டார். பிரச்னைக்குறிய ஒரு சொத்தை பெயர் மாற்றம் செய்ய மறுத்த காரணத்தால் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பாத் வேண்டுமென்றே இந்த வழக்கை ஜோடித்தது சமீபத்தில் நடந்த விசாரணையின் மூலம் தெரியவந்தது. இதையடுத்து சஞ்சீவ் பாத் இந்த மாத தொடக்கத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக சஞ்சீவ் பாத் கடந்த 2015ம் ஆண்டு முறையாக பணிக்கு வரவில்லை என்று கூறி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்காக மாநில பாஜக அரசு மீதும், பிரதமர் நரேந்திர மோடி மீதும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. ‘‘தனது கணவருக்கு நீதி கிடைக்க வேண்டும்’’ என்று அவர் கைது செய்யப்பட்டவுடன் அவரது மனைவி ஸ்வேதா பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில்,‘‘தனது கணவர் உச்சநீதிமன்றத்தில் முறையிட விடாமல் தடுக்கப்பட்டுள்ளார்’’ என்று ஸ்வேதா உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் இது குறித்து கூறுகையில்,‘‘வழக்கமாக குற்றவாளிகள் தான் நீதிமன்றத்திற்கு வருவார்கள். ஆனால், இந்த வழக்கில் அவரது மனைவி நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். ஒரு குடிமகன் தீவிரமான ஒரு குற்றச்சாட்டை சுமத்தினால் அதன் மீது அரசு கவனம் செலுத்த வேண்டும். இது உண்மையாக இருந்தால் தீவிரமான குற்றச்சாட்டாகும்’’ என்று தெரிவித்தது.

குஜராத் மாநில அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி கூறுகையில்,‘‘வரும் 28ம் தேதி இதற்கு பதிலளிக்கப்படும்’’ என்றார். இதையடுத்து வழக்கு விசாரணை அக்டோபர் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.