காந்திநகர்:

குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. வரும் 14ம் தேதி 2வது கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில் பாஜக.வுக்கு முடிவு கட்டும் தேர்தலாக இருக்கும் என்ற பேச்சு எழுந்துள்ளது.

இதனால் ஒரு பிரதமர் தனது நிலையில் கீழிறங்கி பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது. மன்மோகன் சிங் பாகிஸ்தான் முன்னாள் அமைச்சருடன் சேர்ந்து குஜராத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக சதிசெய்கிறார் என்று மோடி குற்றம் சாட்டினார். அமைதிக்கு பெயர்போன மன்மோகன் சீறிவிட்டார். மக்களிடம் மன்னிப்புக் கேளுங்கள் என்று ஆவேசமாக பதிலடி கொடுத்தார்.

மேலும், 24 வயது இளைஞன் ஹர்திக் படேல், எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், தனது மக்களிடம் பேசுகிறார். 14ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள மேஹ்சானா, பதான் மற்றும் வடக்கு குஜராத் மாவட்டங்களில் பாஜகவுக்கு ஒரு இடம்கூட கிடைக்காது என்கிறார். அதை உறுதிபடுத்துவோம் என்று மக்கள் குரல் கொடுக்கிறார்கள்.

தேர்தல் நடைபெறவுள்ள பகுதிகளில் மோடியும், ராகுலும் சாலை வழிப் பிரச்சாரம் செய்ய போலீஸ் அனுமதிக்கவில்லை. ஆனால், ஹர்திக் பிரச்சாரம் செய்ய வரும்போது போலிஸ் தடுக்கவே இல்லை. தடுத்தால் மேலும் விளைவு மோசமாகும் என்ற பயம் தான் இதற்கு காரணம்.

காங்கிரஸ் ஆதரவுடன் போட்டியிடும் தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி, எஸ்டிபிஐ அமைப்பிடமிருந்து 50 ஆயிரம் நன்கொடை பெற்றதாகவும், அந்த அமைப்பு தீவிரவாத அமைப்பு என்றும் பிரச்சாரம் செய்கிறது.

ஆனால், அந்த அமைப்பு தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையது என்றால், இத்தனை ஆண்டுகள் அமித் ஷாவும், மோடியும், ராஜ்நாத் சிங்கும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று ஜிக்னேஷ் கேள்வி எழுப்பி மடக்குகிறார். இப்படி எந்த பந்தைப் போட்டாலும் மடக்கி மடக்கி அடித்தால் மோடியும் பாஜகவும் பாவம் என்ன தான் செய்வார்கள் என்று பரிதாபம் ஏற்பட கூடிய நிலை உருவாகியுள்ளது.