செய்தியாளரைக் கைது செய்த குஜராத் போலீஸ்..

தேசத்துரோகம், சமூகங்களிடையே வெறுப்புணர்வைத் தூண்டுதல் போன்ற செய்திகளை வெளியிடும் நிருபர்களைத் தான் அரசாங்கம், வழக்கமாகக் கைது செய்யும்.

ஆனால், ’’முதல்வர் மாற்றப்படுகிறார்’’ என்று செய்தி வெளியிட்ட நிருபர் கைது செய்யப்பட்டிருப்பது, வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் பா.ஜ.க.வின் விஜய ரூபானி முதல்- அமைச்சராக இருக்கிறார்.

‘’குஜராத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதால், முதல்வர் பதவியில் இருந்து ரூபானி  மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக மத்திய அமைச்சர் மாண்டவியா, புதிய முதல்வராக நியமிக்கப்பட உள்ளார்’’ எனக் குஜராத்தில் உள்ள ‘’ ஃபேஸ் ஆப் தி நேஷன்’’ என்ற இணையதளம் யூகச்செய்தி ஒன்றை வெளியிட்டது.

சொற்ப எண்ணிக்கையில் தான் அந்த செய்தி மக்களைச் சென்று அடைந்திருக்கும்.

ஆனால் அந்த செய்தியை உள்ளூர் மீடியாக்கள் அனைத்தும், மறு பிரசுரம் செய்து வெளியிட, காட்டுத்தீ போல் பரவியது, ’’முதல்வர் மாற்றம்’’ நியூஸ்.

இதனால் அந்த செய்தியை வெளியிட்ட தாவல் பட்டேலை குஜராத் குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்துள்ளது.

– ஏழுமலை வெங்கடேசன்