Gujarat: Police Brutally Assault & Publicly Parade A Restaurant Owner For Allegedly Denying Them Free Food

 

‘காவல்’துறைக்கு மாமூலாக தரும் ‘இலவச’ சாப்பாடைத் தர மறுத்ததால், உணவக உரிமையாளரையும், அவரது உறவினர்களையும் கையில் விலங்கிட்டு, சாலையில் அடித்து உதைத்து இழுத்துச் சென்ற கொடுமை பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் நிகழ்ந்துள்ளது.

 

குஜராத் மாநிலம் பவாங்கர் மாவடட்டம் பலிடானா நகரில், யூசுப்பாய் நோடியாவும் அவரது சகோதரர்களும் சேர்ந்து 6 உணவகங்களை நடத்தி வருகின்றனர். பலிடான காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள், இவர்களது உணவகங்களில் வந்து அவ்வப்போது சாப்பிட்டுவிட்டும், பார்சல்களை வாங்கிக் கொண்டும் கடன் சொல்லிவிட்டுச் செல்வது வாடிக்கையாக இருந்துள்ளது. கடன் என்பது பெயர்தான். மற்றபடி அது சுவாகாதான்! இது இந்தியாவில் காவல்துறைக்கே உரிய பண்பாடு என்பதால் வியப்படைய ஏதுமில்லை. ஆனால், இதற்குப் பிறகு நடந்த சம்பவங்கள், குஜராத்தில் ஆட்சி, அதிகாரத்தில் இருக்கும் அரசின் தன்மையை படம் பிடித்துக் காட்டுவதாக இருக்கிறது. அதுமட்டுமின்றி, 2001ல் நிகழ்ந்த குஜராத் கலவர நிகழ்வுகளையும் இந்த சம்பவங்கள் நமக்கு நினைவூட்டுகின்றன.

 

யூசுப்பாய் நோடியா சகோதரர்களின் கடைகளில் ‘காவல்தெய்வங்கள்’ கபளீகரம் செய்து போன சாப்பாட்டுக் கணக்கு சுமார் 3 லட்சம் ரூபாயைத் தாண்டி விட்டது. இந்த நேரத்தில், பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு அறிவிப்பால், யூசுப்பாயின் வியாபாரம் கடுமையாக பாதித்துள்ளது. இதனால், அதற்கு மேலும் காவல்துறைக்கு இலவச உணவுக் கப்பம் கட்டிச் சமாளிக்க முடியாத அளவுக்கு தொழிலில் நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து, பழைய பாக்கிகளைக் கொடுத்து விட்டு இனி உணவு வாங்கிச் செல்லுங்கள் என்று சாப்பாடு வாங்க வந்த போலீசாரிடம் யூசுப்பாய் கூறியிருக்கிறார். அவ்வளவுதான்… காவல்தெய்வங்களுக்கு கோபம் வந்துவிட்டது.

 

அப்பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வந்த சங்வி என்பவரை மிரட்டி வாங்கப்பட்ட பொய்ப்புகாரின் அடிப்படையில், யூசுப்பாயின் சகோதரர் கரீம்பாய் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர். இதுகுறித்து நியாயம் கேட்கச் சென்ற யூசுப்பாயையும் அடித்து உதைத்து உள்ளே தள்ளி உள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து காவல்நிலையத்திற்கு சென்ற யூசுப்பாய் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களையும் கண்மூடித் தனமாக தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த ஒரு பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அது மட்டுமின்றி, யூசுப்பாய் சகோதரர்களை, கைகளில் விலங்கிட்டு சாலைகளில் அடித்து உதைத்து இழுத்துச் சென்றுள்ளனர். அப்போது யூசுப்பாய் சகோதரர்களைக் கடுமையாக தாக்கி உள்ளனர். கைவிலங்குடன் அவர்களை இழுத்துச் சென்று, தாங்கள் நடத்தி வந்த உணவகங்கள் முன்பாக அவர்களை நிறுத்தி இனி நாங்கள் இங்கு தொழில் செய்ய மாட்டோம் என கூற வைத்துள்ளனர். இதுதொடர்பாக செல்போன்களில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன. யூசுப்பாய் குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சங்வி என்பவரது கடைக்குள் பயங்கரமான ஆயுதங்களுடன் சென்று கலவரத்தில் ஈடுபட்டதுடன், ரூ2000 பணத்தையும் திருடியதாக அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் பயங்கரமான ஆயுதங்கள், கலவரம் என்ற குற்றச்சாட்டுகள் மூலமாகத்தான் போலீசார்யூ சுப்பாய் குடும்பத்தினரை சிறைக்குள் தள்ளி உள்ளனர்.

 

இந்த சம்பவங்கள் மார்ச் மாதம் 15ஆம் தேதியை ஒட்டி நடைபெற்றவை. யூசுப்பாய் சகோதரர்கள் நடத்தி வந்த 6 உணவகங்கள், ஜவுளிக்கடைகள் அனைத்தும் தற்போது மூடப்பட்டுள்ளன. அந்தக் குடும்பமே தற்போது நிலைகுலைந்து போனது.

 

கைது செய்யப்பட்டதில் இருவர் மறுநாளே ஜாமீனில் வெளிவந்தனர். மற்றவர்கள் சில மாத சிறைவாசத்திற்குப் பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் பலிடானா நகருக்கு வெளியில் மூன்று மாதங்கள் தங்கி இருக்க வேண்டும் என்பதுதான் நீதிமன்றத்தின் நிபந்தனை!

 

ஒருவழியாக ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து வழக்கறிஞராக மாறிய ராகுல் சர்மா, யூசுப்பாயின் குடும்பத்திற்கு உதவ முன்வந்துள்ளார். காவல்துறை நடத்திய அத்துமீறல்கள் குறித்து முறையிட்டு, யூசுப்பாயின் குடும்பத்தினர் சார்பில் அவர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் எப்ஐஆரை ரத்து செய்து உத்தரவிட்டது. பாலிட்டா நகர் காவல்துறை மீதும் புகார் செய்யப்பட்டு எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கும் புகார் அளித்துள்ளனர். ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கிறார் யூசுப்பாய் குடும்பத்தினருக்கு உதவும் வழக்கறிஞர் ராகுல் சர்மா.

 

இதுதானய்யா குஜராத்!

வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ள முகநூல் இணைப்புகள்…

https://www.facebook.com/rajesh.nodiya/videos/1019846211449241/

https://www.facebook.com/kaleemahd/videos/1467471013284167/