அகமதாபாத்:

தலித் போராளி பானு வன்கர் மரணத்தை எதிர்த்து பேரணி செல்ல முயன்ற குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி கைது செய்யப்ப்டடார்.

குஜராத் மாநிலத்தில் தலித் மக்கள் நலனுக்காக போராடி வந்தவர் பானு வன்கர். இவர் படான் மாவட்டம் துத்கா கிராமத்தை சேர்ந்த 2 தலித் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

நீண்ட நாட்களாகியும் வழங்கப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த 15ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்தார். உடன் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.

                                                                              பானு வன்கர்

 

இச்சம்பவத்தை கண்டித்து சுயேட்சை எம்எல்ஏ.வும், தலித் போராளியுமான ஜிக்னேஷ் மேவானி அகமதாபாத்தில் பேரணி நடத்தும் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். பேரணியில் கலந்து கொள்வதற்காக காரில் புறப்பட்ட ஜிக்னேஷ் மேவானியையும், அவரது ஆதரவாளர்கள், காங்கிரஸ் கட்சியின் தலித் பிரிவு தலைவர் நவுசாத் சோலங்கி உள்ளிட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

முன்னதாக காரில் இருந்த ஜிக்னேஷ் மேவானியை போலீசார் வெளியே இழுத்து கைது செய்தனர். இதில் கார் சாவி உடைந்துவிட்டது. வீட்டு மனை வழங்க அரசு காலம் தாழ்த்திய காரணத்தால் தான் பானு வன்கர் தற்கொலை செய்து கொண்டதாக கூறி குஜராத்தில் போராட்டம் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.