Random image

கிர் வன விழாவுக்கு வெளிநாட்டு சிங்கங்கள் மாடலா ? குஜராத்தில் குழறுபடி

கமதாபாத்

குஜராத் சுற்றுலா வளர்ச்சி மையம் கிர் வன விழாவுக்காக வெளிநாட்டு வனப்பகுதி வீடியோக்களை வெளியிட்டு விளம்பரம் செய்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் குஜராத் சுற்றுலா வளர்ச்சி மையம் சார்பில் கிரி வன திருவிழா நடைபெறுகிறது.   கிர் என்பது குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள சிங்கங்கள் சரணாலயம் ஆகும்.  இந்த வருடம் வரும் செப்டம்பர் 16 வரை இந்த கிர் வன விழா நடைபெற உள்ளது.

இதற்காக குஜராத் சுற்றுலா மையம் ஒரு விளம்பர வீடியோவை வெளியிட்டுள்ளது.   இதில் கிர் வனப்பகுதியில் உள்ள சிங்கங்களை காட்டாமல் ஆப்ரிக்க சிங்கங்களையும் சிகாகோ மிருகக்காட்சி சாலையில் உள்ள சிங்கங்களையும் காட்டுகிறது.  பின்னணியில் இந்த சிங்கங்கள் கிர் வன பகுதியில் உள்ளதாக குஜராத்தி மொழியில் வர்ணிக்கப்படுகிறது.

விளம்பரப் படங்களில் வெளிநாட்டு மாடல்கள் தோன்றுவது போல் சுற்றுலாத்துறை விளம்பரத்தில் வெளிநாட்டு சிங்கங்கள் தோன்றி உள்ளன என இதைக் கண்ட மக்கள் கிண்டல் செய்துள்ளனர்.  இந்த வீடியோ பதிவுகள் யு டியூபில் இடம்பெற்றுள்ள புகழ் பெற்ற ஆங்கில வீடியோக்களின் தொகுப்பாகும்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் மிகவும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.    மேலும் இத்தகைய வீடியோவை ஏதாவது விளம்பர நிறுவனம் எடுத்திருக்கலாம் எனவும் அதை சோதிக்காமல் அரசு வெளியிட்டிருக்கலாம் எனவும் கருத்துக்கள் உலவி வருகின்றன.