மோடியை மன்னிக்கவே மாட்டேன்!: கலவரத்தில் கொல்லப்பட்ட முன்னாள் அமைச்சரின் மனைவி சபதம்

பிரதமர் நரேந்திர மோடியை மன்னிக்கவே மாட்டேன் என்று  2002ம் ஆண்டு குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்ட முன்னாள் அமைச்சர்  ஜஃப்ரியின் மனைவி ஜக்கியா ஜஃப்ரி உறுதிபட தெரிவித்துள்ளார்.

2002ம் ஆண்டு குஜராத் மாநில முதல்வராக நரேந்திர மோடி பொறுப்புவகித்தபோது பெரும் கலவரம் மூண்டது. ஏராளமான இஸ்லாமியர்கள் குறிவைத்து தாக்கிக் கொல்லப்பட்டார்கள்.   இக்கலவரத்தில்  நரேந்திரமோடி உள்ளிட்ட பாஜகவினர் பலர் மீது குற்றம்சாட்டப்பட்டது. ஆனால்  மோடி மற்றும் குஜராத் மாநில அதிகாரிகளுக்கும் ம், கலவரத்திற்கும் தொடர்பு இருப்பதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை என்று உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு 2013ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

இந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து, மோதி மற்றும் பிறரை, 2017 அக்டோபர் 5ஆம் தேதியன்று குஜராத் உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது.

இந்நிலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து ஜக்கியா ஜஃப்ரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த விசாரணை நவம்பர் 26ஆம் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது.

இந்த கலவரத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஷான் ஜஃப்ரியும் கொல்லப்ப்டார். இவரது  மனைவி ஜக்கியா ஜஃப்ரி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் மோடி உள்ளிட்டவர்களை விடுவித்தது தவறான நடவடிக்கை என்று தெரிவித்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த நிலையில், ஜக்கியா ஜஃப்ரி தெரிவித்தாவது:

“2002 பிப்ரவரி 28ம் தேதியை என்னால் மறக்கவே முடியாது. கோத்ரா சம்பவம் நடந்த இரண்டாவது நாளான அன்று பதட்டமான சூழ்நிலை நிலவியது. இஸ்லாமியர்கள்  அதிகமாக வசிக்கும் அகமதாபாத் குல்பர்க் சொசைட்டியை பெரும் வன்முறை கும்பல் தாக்கியது. அதில்   69 நபர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சரான எனது கணவர் ஜஃபரியும் ஒருவர்.

முன்னதாக பதட்டமான சூழலை அறிந்து எனது கணவர் காவல்துறையை அழைக்க முயன்றார்.  காவல்துறை மூத்த அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களையும் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றார்.  அப்போது முதலமைச்சராக இருந்த மோடியையும் அவர் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் யாரும் உதவிக்கு வரவில்லை.

இந்த சம்பவத்தில் மோடி மற்றும் அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கிறது. மோடிக்கு தண்டனை வாங்கித்தரும்வரை நான் ஓயமாட்டேன். அவரை விடமாட்டேன். இது நீதி போராட்டம். பாதிக்கப்பட்ட.. மரணமடைந்த அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.