கமதாபாத்

ணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் ஒரே வருடத்தில் குஜராத் மாநிலத்தில் அதிக அளவில் ரூ.500 மற்றும் ரூ.2000 கள்ள நோட்டுக்கள் பிடிபட்டுள்ளன.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு சொல்லப்பட்ட காரணங்களில் கள்ள நோட்டுப் புழக்கம் அதிக அளவில் உள்ளது என்பதும் ஒன்றாகும்.   ஆனால் புழக்கத்தில் உள்ள செல்லாத நோட்டுக்களில் பெரும்பாலான நோட்டுக்கள் ரிசர்வ் வங்கியிடம் திரும்ப வந்துள்ள போதிலும் அவற்றில் கள்ள நோட்டுக்கள் அதிகம் இல்லை.   அத்துடன் புதியதாக வெளியிடப்பட்ட ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்களில் கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் வந்துள்ளதாக தகவல்கள் வந்தன.

அரசு இந்த கள்ள நோட்டுகளை கண்டுபிடிக்க தீவிர முயற்சி எடுத்தது.  அதையொட்டி ரூ. 5,11,36,000 மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுக்களும்,  ரூ.1,66,52,000 மதிப்பிலான  ரூ.2000 கள்ள நோட்டுக்களும் பிடிபட்டுள்ளன.   இவ்வாறு பிடிபட்டுள்ள நோட்டுக்களில் பெரும்பாலான நோட்டுக்கள் குஜராத் மாநிலத்தில் பிடிபட்டுள்ளன.

இது குறித்து குஜராத் அரசு அதிகாரியான பிரதிப்சிங் ஜடேஜா, “பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் ஒரே வருடத்தில் குஜராத்தில் அதிக அளவில் கள்ள நோட்டுக்கள் பிடிபட்டுள்ளன.   குஜராத்தில் வர்த்தகத்துறை சிறந்து விளங்குவதால் இங்கு எளிதாக கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடுகின்றனர்.

இந்த கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடுபவர்கள் பொதுவாக மேற்கு வங்கம் மற்றும் வங்க தேசத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர்.

இவ்வாறு குஜராத்தில் புழக்கத்தில் விடப்படும் கள்ள நோட்டுக்கள் இங்கிருந்து மும்பை, டில்லி, பெங்களூரு மூலமாக நாடெங்கும் பரப்பப் படுகிறது.   அதன் மூலம் நமது பொருளாதாரம் வலு இழக்கிறது.”  என தெரிவித்துள்ளார்.