கமதாபாத்

குஜராத் மாநில கல்வித்துறையால் வழங்கப்பட்ட 12ஆம் வகுப்பு சமஸ்கிருதப் பாடப்புத்தகத்தில் சீதாவை கடத்தியவர் ராமர் என குறிப்பிடப்பட்டுள்ளது

உலகெங்கும் புகழ்பெற்ற இதிகாசம் ராமாயணம் ஆகும்.    இந்தியாவில் ராமாயணக் கதையை தெரியாதவர் யாரும் இருக்க மாட்டார்கள்.   யாராவது உளறினால்,  தமிழ் மொழியில், “விடிய விடிய ராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பா என்பது போல” என உதாரணம் காட்டுவார்கள்.   சமஸ்கிருத மொழியில் புகழ்பெற்ற கவிஞரான காளிதாசர் ராமாயணத்தை ரகுவம்சம் என்னும் பெயரில் கவிதை நூலாக பாடி உள்ளார்.

குஜராத் மாநிலத்தில் 12ஆம் வகுப்புக்கான சமஸ்கிருத பாடப் புத்தகம் ஆங்கில மொழி பெயர்ப்புடன் அம்மாநில கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.   அந்த புத்தகத்தில் 106 ஆம் பக்கத்தில், “கவிஞர் இந்த இடத்தில் ராமருடைய கதாபாத்திரத் தன்மையையும் அவருடைய எண்ணங்களையும் தெளிவாக கூறி உள்ளார்.  ராமர் தனது தம்பி லட்சுமணனிடம் ராமரால் கடத்திச் செல்லப்பட்ட சீதை குறித்து தெரிவிப்பது உள்ளத்தை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது” என உள்ளது.

இது பொதுமக்களிடையேயும், கல்வியாளர்களிடையேயும் கடும் பரப்ரப்பை உண்டாக்கி உள்ளது.   இது குறித்து சமஸ்கிருத பேராசிரியர் ஒருவர் சீதையைக் கடத்தியது ராவணன் என்பது ராமாயணம் அறிந்த அனைவருக்கும் தெரிந்த ஒரு தகவல்.   அவ்வாறிருக்க அரசு வெளியுட்டுள்ள புத்தகத்தில் இப்படி ஒரு தவறான செய்தி வருவது தவறாகும்” என கூறி உள்ளார்.

இது குறித்து குஜராத் மாநில பாடப்புத்தகத்துறை இயக்குனரிடம் கேட்ட போது முதலில் அவர் இதை மறுத்துள்ளார்.   அதன் பிறகு செய்தியாளர்கள் சம்பந்தப்பட்ட புத்தகத்தை காட்டி உள்ளனர்.  அப்போது அவர், “இதே புத்தகம் குஜராத்தி மீடியத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  அதில் சரியான தகவல் உள்ளது.   ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யும் போது ஒரு ‘சிறு பிழை’ உண்டாகி விட்டது” என சமாளித்துள்ளார்.